என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக தென்னை தினம்"

    • தென்னை மரத்தில் இருந்து நமக்கு இயற்கை பானமாக பதநீர், நீரா போன்றவையும் கிடைக்கிறது.
    • இந்தியாவில் தென்னை மர வளர்ப்பில் முதல் இடம் பிடித்து இருப்பது கேரள மாநிலம்.

    பெற்ற பிள்ளை சாப்பாடு போடவில்லை என்றாலும், வளர்த்த பிள்ளை (தென்னை) சாப்பாடு போடும் என்பது பழமொழி.

    இதைத்தான் நமது கவியரசு கண்ணதாசன், பிள்ளைய பெற்றால் கண்ணீரு, தென்னைய பெற்றால் இளநீரு என்று எழுதியிருப்பார். எத்தனை உண்மை பாருங்கள். அதனால்தான் தென்னையை பிள்ளையாக கருதி வளர்த்தனர் நம் முன்னோர்கள்.

    நமது அன்றாட வாழ்க்கையில் தென்னையின் பயன்பாடு இல்லாமல் இருக்காது. தென்னையில் இருந்து பெறப்படும் தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை நமது உணவில் தினந்தோறும் பயன்படுத்துகிறோம். இதுதவிர இளநீரை இயற்கையின் குளிர்பானமாக குடித்து வருகிறோம்.

    தென்னை மரத்தில் இருந்து நமக்கு இயற்கை பானமாக பதநீர், நீரா போன்றவையும் கிடைக்கிறது. இவற்றின் மூலம் கருப்பட்டி, வெல்லம் போன்ற பொருட்களும் நமக்கு கிடைக்கின்றன. தென்னை ஓலை நம் வீட்டின் நிழல் பந்தல் அமைப்பதற்கு பயன்படுகிறது.

    இது தவிர தென்னை நாரில் இருந்து மெத்தை, காயர் பித் (தென்னை நார் கட்டி) உள்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இப்படி பல்வேறு விதங்களில் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒட்டி உறவாடும் தென்னை மரங்களின் நடவு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக இருந்தாலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆகிய இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்தியாவில் தென்னை மர வளர்ப்பில் முதல் இடம் பிடித்து இருப்பது கேரள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென்னை தொழிலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி உலக தென்னை தினம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. உணவு, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் வெப்பமண்டல நாடுகளில், மக்களின் வாழ்க்கையில் தேங்காய்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அடையாளப்படுத்தப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் தென்னை தினம் கொண்டாடுவதற்கு ஒரு கருப்பொருள் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தின் கருப்பொருள் 'தேங்காயின் சக்தியை வெளிக்கொணர்தல், உலகளாவிய நடவடிக்கைக்கு ஊக்கமளித்தல்' என்பதாகும்.

    இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தென்னை மரம் தற்போது பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல், வண்டு தாக்குதல், வாடல்நோய் போன்றவைகள் தென்னை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதை கட்டுப்படுத்த இயற்கை மற்றும் ரசாயன உரங்களால் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    மேற்கண்ட நோய்களின் தாக்குதலால் பொள்ளாச்சி மற்றும் தென்னை நடவு செய்த பகுதிகளில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. தேங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் நோய்களில் இருந்து தென்னையை காப்பாற்ற தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், தென்னை விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பதும் தென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    உலக தென்னை தினம் கொண்டாடும் நிலையில் "தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும்" என்ற பழமொழிக்கேற்ப தென்னை மற்றும் தென்னை விவசாயிகளை செழிக்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×