என் மலர்
நீங்கள் தேடியது "slug 423831"
- கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
- நெல்லை மாவட்டத்தில் சிறுவன் சாதி ரீதியாக தாக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்:
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய வெளியுறவு கொள்கை பலவீனம் ஆகிவிட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை உலகளவில் ஒரு நாடு கூட கண்டிக்கவில்லை. அதுவே நம்முடைய பலகீனம் தானே. சபாநாயகர் தொகுதியிலேயே சட்ட ஒழுங்கு சரியில்லை என்று இன்பதுரை கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதை வைத்து முடிவு எடுக்க முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஒரு இடத்திலும் இல்லை.
அதே சமயம் திருப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பது யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒரு மாநில அரசுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க முழு உரிமை உள்ளது. அங்கு பணியாளர்களை நியமிக்கும் உரிமையும் மாநில அரசுக்கு தான் இருக்கிறது. அப்படி இருக்க கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதிக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை இவ்வளவு நாட்கள் கழித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக பணியாளர் நியமனம் மத்திய அரசின் விதிப்படி இல்லை என்று கூறுகிறார்கள். இதுவரை இருந்தது. ஆனால் கலைஞர் பெயரில் அமைக்கும்போது தான் குறை இருப்பதை கண்டுபிடித்தார்களா? என்று தெரியவில்லை. கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வர தனிப்பட்ட முறையில் என்ன வெறுப்பு இருக்கிறது? என்றும் தெரியவில்லை. மற்ற பல்கலைக்கழகம் அமைக்க அனுமதியை கவர்னரே தந்துள்ளார். கலைஞர் பெயரில் அமைக்க மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். அது திட்டமிட்டு என்ன நோக்கத்துக்காக செய்கிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் சிறுவன் சாதி ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். சட்டப்படி யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த குற்றத்தையும் மூடி மறைப்பது கிடையாது. துணை போவதும் கிடையாது. பள்ளியில் படிக்கும்போதோ சமூகத்தில் வரும்போதோ தனிப்பட்ட சில பேரின் விருப்பு வெறுப்போடு நடக்கும் சம்பவம். இதுதொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆணவக் கொலை தொடர்பாக சட்டம் கொண்டு வருவதில் நல்ல முடிவு வரும்.
தமிழக அரசு தென்மாவட்டங்களுக்கு அதிக வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என்றும், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு தான் மேற்கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் எந்த காரணத்துக்காக குற்றம் சொல்கிறார் என்று தெரியவில்லை.
தமிழகம் தான் இந்தியாவிலேயே கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆகும். இந்த புள்ளி விவரத்தை மத்திய அரசு தான் தந்துள்ளது. எனவே அதை எல்.முருகன் படிக்க வேண்டும். படித்தால் நல்லது. தொழில் தொடங்க வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு நிதி வந்துள்ளது என்று மாநில அரசு கூறும்படி மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டில் இருந்து எந்த நிதி வந்தாலும் மத்திய அரசு மூலமாக தான் வரும். அப்படி இருக்க மாநில அரசிடம் ஏன் கேட்க வேண்டும். புள்ளி விவரத்தை எடுத்து மத்திய அரசே பேசலாம். தமிழக அரசு வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ செய்து வருகிறார்கள்.
தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதை தாங்க முடியாமல் இதுபோன்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரின் சுற்று பயணத்தால் தமிழகத்தில் எதாவது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






