என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஷ்வாஷர் பயன்பாடு"

    • சமையல் பாத்திரங்களை டிஷ்வாஷர் மூலம் சுத்தப்படுத்த முடியும்.
    • அவ்வப்போது ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்வது அவசியம்.

    சமையல் அறையில் வேலைகளை சுலபமாக்குவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தக்கூடியது 'டிஷ்வாஷர்' எனப்படும் பாத்திரங்களை சுத்தப்படுத்தும் எந்திரம். இதனுடைய அமைப்பு, பயன்பாடு மற்றும் பிற விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    தானியங்கி சலவை எந்திரத்தைப் போலவே, டிஷ்வாஷரிலும் தண்ணீரை உள்ளே செலுத்தும் 'இன்லெட் பைப்', உள்ளிருக்கும் தண்ணீரை வெளியேற்றும் 'அவுட்லெட் பைப் இரண்டும் சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். சமையல் அறையில் தண்ணீர் வசதி உள்ள இடத்தில், டிஷ்வாஷர் எந்திரத்தை வைப்பது முக்கியமாகும்.

    அன்றாடம் உபயோகிக்கும் எவர்சில்வர், கண்ணாடி. பீங்கான் வகை சமையல் பாத்திரங்களை டிஷ்வாஷர் மூலம் சுத்தப்படுத்த முடியும். அலுமினியம், வெள்ளி, இரும்பு மற்றும் நான்-ஸ்டிக் பாத்திரங்களை டிஷ்வாஷரில் சுத்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    டிஷ்வாஷர், அதிக சூடான தண்ணீரின் மூலம் பாத்திரங்களை சுத்தம் செய்யும். எனவே 'புட் கிரேடு அல்லது டிஷ்வாஷர் சேப்' என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே டிஷ்வாஷர் மூலம் சுத்தப்படுத்த முடியும்.

    டிஷ்வாஷரின் உள்ளே சுத்தம் செய்ய வேண்டிய பாத்திரங்களை அடுக்குவதற்கு 2 அல்லது 3 டிரேக்கள் கொடுக்கப் பட்டிருக்கும். மேல் அடுக்கில் சிறிய டீஸ்பூன், கரண்டி, முடி போன்ற வற்றையும், நடு அடுக்கில் சிறிய கிண்ணங்கள், பாத்திரங்கள், டம்ளர்கள் போன்றவற்றையும் கடைசி அடுக்கில் பெரிய தட்டுகள், பாத்திரங்கள், குக்கர், வாணலி போன்றவற்றையும் அடுக்கலாம்.

     டிஷ்வாஷரில் பாத்திரங்களை வரிசையாகவும், தலைகீழாக கவிழ்த்து அடுக்க வேண்டும். பாத்திரங்களில் இருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்றிய பிறகே அவற்றை எந்திரத்தின் உள்ளே வைக்க வேண்டும். டிஷ்வாஷரின் உள்னே இருக்கும் இரண்டு துளை கொண்ட இறக்கைகளின் வழியாக, சூடான தண்ணீர் எல்லா பாத்திரங்களின் மீதும் பிய்ச்சி அடிக்கப்படும்.

    பாத்திரங்களில் ஏதேனும் உணவுத் துணுக்குகள் இருந்தால், அவை டிஷ்வாஷரில் உள்ள ஃபில்டரில் சேமிக்கப்படும். அவ்வப்போது ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்வது அவசியமாகும்.

    டிஷ்வாஷர் சால்ட்:

    தண்ணீரை மென்மையாக்குவதற்கு டிஷ்வாஷரில் ஒருவகையான உப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த உப்பை அவ்வப்போது அதற்கென உள்ள அமைப்பில் நிரப்ப வேண்டும். அதுபோல பாத்திரம் துலக்கும் சோப்புத்தூளையும், அவ்வப்போது அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் அறையில் நிரப்ப வேண்டும். சலவை எந்திரத்தில் உள்ளதைப் போலவே. டிஷ்வாஷரிலும் நமக்கு ஏற்ற சுத்தப்படுத்தும் முறையை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

    தண்ணீர் பயன்பாடு:

    டிஷ்வாஷரில் குறைந்த அளவு தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. பாத்திரங்களை கைகளால் துலக்குவதை விட, டிஷ்வாஷர் மூலம் சுத்தம் செய்யும்போது இரண்டு மடங்கு தண்ணீர் மிச்சப்படுத்தப்படுகிறது.

    மின்சார பயன்பாடு:

    டிஷ்வாஷரை ஒருமுறை பயன்படுத்தும்போது, ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். டிஷ்வாஷர் இயங்கிக் கொண்டு இருக்கும்போது மின்சார துண்டிப்பு காரணமாக நிறுத்தப்பட்டால், மின் இணைப்பு கொடுத்தவுடன் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.

    டிஷ்வாஷர் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும். அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் டிஷ்வாஷரை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். சமையல் அறையில் போதுமான

    இடவசதியும், தண்ணீர் வசதியும் இருப்பவர்களுக்கு டிஷ்வாஷர் சரியான தேர்வாகும்.

    ×