என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் உயிரிழப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு குடும்பம் வசிப்பதற்கு தேவையான அளவிற்கு 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் வீடு கட்டுமான பணிகள் தொடங்கியது.
    • தாய் வீட்டு சீதனம் ஊர்வலமாக கொண்டு வருவதைப் போல அனைத்தையும், மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து முத்துலட்சுமியின் வீட்டில் வைத்தனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த மணலூர் காலணியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், வேலைக்கு சென்று கூலி வாங்கினால் மட்டுமே உணவு என்ற ஏழ்மை நிலையில் வசித்து வந்தார்.

    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தன்னை போலவே ஏழ்மை நிலையில் இருந்த முத்துலட்சுமி (35) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தன்னை நம்பி மனைவி, குழந்தைகள் என 6 பேர் உள்ளதை கவனத்தில் கொண்ட சக்திவேல், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் வேலைக்கு சென்று வீடு திரும்புவார். தினமும் மாலை அவர் கொண்டு வரும் கூலி பணத்தை வைத்துதான் மறுநாள் உணவு சமைக்கும் நிலையில் வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர், தான் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து வேலை கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது. விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை கிடைத்தது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினார். அதில் தினமும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் 18-ந் தேதி, சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அவர் வெண்கரும்பூர் சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி தானாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை சற்றும் எதிர்பாராத முத்துலட்சுமி கதறி அழுதார். 5 குழந்தைகளை எவ்வாறு கரையேற்றுவது என செய்வதறியாது திகைத்தார். சக்திவேலின் இறுதி சடங்கு முடிந்தவுடன் உறவினர்கள் சென்றுவிட்டனர்.

    விபத்தில் இறந்ததால், தனது குழந்தைகள் உணவுக்கே கஷ்டப்படுவதாகவும், இன்சூரன்சு அல்லது அரசு உதவி ஏதேனும் பெற்றுத் தருமாறு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜிடம் சக்திவேலின் மனைவி முத்துலட்சுமி மனு கொடுத்தார். இதனை பரிசீலித்த ஆரோக்கியராஜ், நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகள் 5 பேரும் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் கழிகளை நட்டு, அதில் டிஜிட்டல் பேனர்களை கட்டி அதற்குள் வாழ்ந்து வந்தனர். இதனை கண்டு கண்கலங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், தன்னால் முடிந்த ஏதேனும் உதவியை இக்குடும்பத்திற்கு செய்ய முடிவு செய்தார்.

    விருத்தாசலம் சரகத்திற்கு உட்பட்ட போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பில் இது தொடர்பாக பதிவிட்டார். இதனை பார்த்த போலீசார், போட்டி போட்டுக்கொண்டு தாங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினர். இவைகளை ஒருங்கிணைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சக்திவேல் குடும்பத்தார் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார்.

    முன்னதாக சக்திவேலின் பெண் குழந்தைகளான சந்தியா (16), செவ்வந்தி (12) ஆகியோரை திண்டிவனத்தில் உள்ள கருணை இல்லத்தில் சேர்த்து அங்கு படிக்க வைத்தார். ஆண் குழந்தைகளான சரண்குமார் (14), நிகாஷ் (12), நிதிஷ் (8) ஆகியோரை அதே ஊரில் உள்ள அரசு பள்ளியிலேயே படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் போலீசார் மூலம் செய்தார். தொடர்ந்து வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஒரு குடும்பம் வசிப்பதற்கு தேவையான அளவிற்கு 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் வீடு கட்டுமான பணிகள் தொடங்கியது.

    இப்பணிகளை விருத்தாசலம் சரகத்தில் உள்ள போலீசார், கட்டுமான பணிகளை மாறி மாறி மேற்பார்வையிட்டனர். வீடு கட்டுமான பணிகள் முடிந்து இறுதி வடிவம் பெற்றது. இதற்கான திறப்பு விழாவிற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை அழைக்க போலீசார் முடிவு செய்தனர். அவருக்கு அழைப்பு விடுத்தனர். அவரும் வீடு திறப்பு விழாவிற்கு வர சம்மதித்தார்.

    இதையடுத்து கிரகப்பிரவேச பத்திரிகை அடிக்கப்பட்டது. அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது. வீட்டின் வாசல், மாடிகளில் பந்தல் போடப்பட்டது. கிரகப்பிரவேசத்திற்கு வருபவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. மேலும், வீட்டை மட்டும் கட்டி கொடுத்தால், அதில் வைப்பதற்கு பொருள் வேண்டுமே என்பதை உணர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், வீட்டிற்கு தேவையான தொலைக்காட்சி, குளிர்சாதனபெட்டி, சிலிண்டர் இணைப்பு, கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்தையும் வாங்கினார்.

    தாய் வீட்டு சீதனம் ஊர்வலமாக கொண்டு வருவதைப் போல அனைத்தையும், மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து முத்துலட்சுமியின் வீட்டில் வைத்தனர். கிரகப் பிரவேசத்திற்கு வந்தவர்களுக்கு வீட்டின் மாடியில் உணவு பரிமாறும் பணியில் இருந்து, வருவோரை வரவேற்பது, வந்து செல்வோருக்கு தாம்பூலம் வழங்குவது என அனைத்து பணிகளையும் போலீசார் போட்டி போட்டுக் கொண்டு செய்தனர்.

    தொடர்ந்து அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், கருணை இல்லம் என்ற பெயரில் விருத்தாசலம் சரக போலீசாரால் கட்டப்பட்ட புதிய வீட்டினை திறந்து வைத்தார். மேலும், வீட்டின் சாவியை முத்துலட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளிடம் ஒப்படைத்தார். குழந்தைகளை நன்றாக படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, படிப்பு தொடர்பாக எந்த உதவியாக இருந்தாலும், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

    இந்த விழாவில் விருத்தாலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார், வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் திரளாக பங்கேற்றனர். ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் போலீசார் வீடு கட்டி கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    ×