என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத்தி உணவுகள்"
- சமையல் கலை, கடல் போன்றது.
- இந்தியாவில் மட்டும், 30-க்கும் மேற்பட்ட சமையல் கலைகள் இருக்கின்றன.
சமையல் கலை, கடல் போன்றது. கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், ஏன் ஊருக்கு ஊர் கூட சமையல் கலை வித்தியாசப்படும். நம் இந்தியாவில் மட்டும், 30-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலைகள் இருக்கின்றன. ஆனால், நம்மை பொறுத்தவரை, வட இந்தியா, தென் இந்தியா... என இரண்டு வகைப்பாட்டிற்குள் மொத்த உணவு கலாசாரத்தையும் கொண்டு வந்துவிடுகிறோம். தந்தூரி ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, ரொட்டி... இப்படியாக ஒருசில உணவுகளை மட்டுமே வட இந்திய உணவுகளாக நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் வட இந்தியாவில், குஜராத்தில், சூப்பரான, சுவையான உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை.
குஜராத் மக்களின் சமையல் கலையானது, காலநிலைக்கு ஏற்ப மாறுபடக்கூடியதாக இருக்கும். வெயில் காலம், மழைக்காலம், பனிக்காலம்... என தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவார்கள். குஜராத்தில், ஓமப்பொடி போன்ற மிச்சர் வகையிலான லேசான உணவுதான் பலரின் காலை உணவாக இருக்கும். ஆனால் மதிய வேளையில் ரொட்டி, சாதம், மோர், பலவிதமான காய்கறி கூட்டுகள், அப்பளம், இனிப்பு வகைகள் என சாப்பிடும் அளவு அதிகமாக இருக்கும். இரவிலும் கட்டுப்பாடின்றி விரும்பியதை சாப்பிடுவார்கள்.
பெரும்பாலும் சைவ உணவுகளே, குஜராத்தி சமையல் கலையில் அதிகம். குறிப்பாக, எல்லா உணவிலும் இனிப்பு சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இந்த உணவுத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் 35 உணவுகள் சமைத்து பரிமாறப்படுகிறது. தேங்காய் மோர், தீயில் சுட்ட மாங்காயில் தயாரான பானம் ஆகியவை வரவேற்பு பானங்களாக பரிமாறப்பட, பச்சை பட்டாணி கோக்ரா (மடிப்பு பணியாரம்), தூதி நா முதியா (கோதுமை மாவில் தயாராவது), சுருள் வடிவ கந்தவி மற்றும் பத்ரா ஆகியவை சுவைக்கப்படுகிறது.


இவற்றுடன் பேரீச்சை புளி சட்னி, ராஜ்காட் சட்னி, பப்பாளி மற்றும் மிளகாய் சட்னி போன்றவையும் பரிமாறப்பட்டன. இவை மட்டுமா...? உந்தியூ, துவார் கிச்சடி, சோட்டூ பட், பஜ்ரா ரோட்லா (ரொட்டி வகை), நெய் பூரி புல்கா, தெப்லா ரொட்டி, சாப்ரான் உலர் பழ ஸ்ரீகந்த், சர்மா லட்டு, மகாஸ், சுடர்பெனி (இடியாப்பம் போலவே நூலிழைபோல் தயாரிக்கப்படும் இனிப்பு வகை), குல்பி, ஜிலேபி, 3 விதமான அப்பளங்கள், 10 வகையான ஊறுகாய் வகைகள் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான உணவுகள் பரிமாறப்படுகின்றன. குஜராத்தி மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் ஊறுகாய்க்கு தனி இடம் உண்டு.
குஜராத் மக்களின் வீடுகளில், 4 அல்லது 5 சுவைகளில் ஊறுகாய் இருக்கும். அவை அனைத்துமே, வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இன்று, குஜராத்தி மக்கள் தங்கள் வீடுகளில் ஊறுகாய் தயாரிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். வீடுகளிலேயே ஊறுகாய் தயாரிக்கும்போது, உப்பு, காரம் போன்றவை எல்லாம் அளவாக இருக்கும். அதுவே கடை ஊறுகாய் என்றால், அளவுகள் தாறுமாறாக இருக்கும். அது சில உடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம்.
இதில் உந்தியூ என குறிப்பிடப்படும் உணவு, மிகவும் சிறப்பானது. தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவது போல, குஜராத்தில் ஜனவரி மாதத்தில் பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படும். அதில் ஏழை-பணக்காரர்கள் வித்தியாசமின்றி, எல்லா மக்களும் பட்டம் விடுவார்கள்.
அந்த கொண்டாட்டத்தின்போது, `உந்தியூ' உணவுதான் சமைக்கப்படும், எல்லோராலும் சுவைக்கப்படும். எல்லா காய்கறிகளையும், மசாலா பொருட்களுடன் நன்றாக வேகவைத்து பரிமாறப்படும் `உந்தியூ' மிகவும் சத்தான உணவாக கருதப்படுகிறது. இப்படி, ஒவ்வொரு குஜராத்தி உணவிற்கு பின்னாலும், பலவிதமான சுவாரசிய பின்னணிகள்உண்டு.






