என் மலர்
நீங்கள் தேடியது "நகைகடை மேலாளர் கைது"
- திருச்சியில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடந்தது.
- உரிமையாளர் மதன் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.
திருச்சி:
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நகைக்கடை நிர்வாகம் வாடிக்கையாளர்களிடம் செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை என அறிவித்ததோடு ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்குவதோடு, 10 மாத முடிவில் 106 கிராம் தங்கம் வழங்குவதாக அறிவித்தனர்.
இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி நூற்றுக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் வட்டித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டது. கடந்த 2 மாதமாக வங்கி நிர்வாகம் அனுப்பிய காசோலை பணமில்லாமல் திரும்பியது. இந்த வகையில் ரூ. 100 கோடி வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட முதலீட்டாளர்கள் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜூவல்லரி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் 500-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரபு பிரியா உத்தரவின் பேரில் திருச்சி, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சியில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடந்தது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஜூவல்லரி கடை மற்றும் கோகினூர் தியேட்டர் பகுதியில் உள்ள மெயின் கடையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த 2 கடைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 9 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டது.
தங்க நகை 6 பவுன் மட்டுமே கிடைத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் எங்கே போனது? மோசடி கும்பல் முன்கூட்டியே அவற்றை பதுக்கிவிட்டார்களா? என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் திருச்சி பாபு ரோடு பகுதியில் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் தந்தை வீடு மற்றும் ஐயப்பன் கோவில் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட்ஸ் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எதுவும் சிக்கவில்லை.
உறையூர் லிங்க நகரில் உள்ள பிரணவ் ஜூவல்லரி மேலாளர் நாராயணன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் சிக்கியது. கும்பகோணத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் வெள்ளி நகைகள் மட்டுமே கிடைத்துள்ளது.
இதற்கிடையே திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது ஆசைவார்த்தை கூறி மோசடி செய்தல், ஏமாற்றுதல் கூட்டு சதி செய்தல் என்பன உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் மேலாளர் நாராயணனை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிமையாளர் மதன் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கைதான நாராயணனை மதுரையில் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். உரிமையாளர் மதன் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் சென்னை திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற பத்திரப்பதிவுத்துறை உதவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நாடி உள்ளனர்.






