என் மலர்
நீங்கள் தேடியது "தடுப்பு அணை"
- காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம், சீர்காழி இடையே கடலிலும் கலக்கின்றன.
- அதிக மழையின் காரணமாக மேட்டூர் அணை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன.
கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி தமிழகத்தின் டெல்டா பாசனத்துக்கு ஜீவ நாடியாக உள்ளது. இந்த நதி கர்நாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
காவிரி ஆறு திருச்சி முக்கொம்பில் காவிரி என்றும், கொள்ளிடம் என்றும் 2 ஆறுகளாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பூகாரிலும், கொள்ளிடம் ஆறு சிதம்பரம், சீர்காழி இடையே கடலிலும் கலக்கின்றன.
கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரியின் பிறப்பிடம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கிறாள் காவிரி தாய்.
இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.
தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. ஒகேனக்கல்லுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கும் அணையாக உள்ளது.
மேட்டூர் அணை தண்ணீர் மூலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், 16.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. வழக்கமாக அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை குறுவை, சம்பா, தாளடி என, முப்போகத்திற்கும், 230 நாட்களுக்கு, 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
இதில், டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகைக்கு மட்டுமே, 275 டி.எம்.சி., வரை தண்ணீர் தேவை இருக்கும்.
மேட்டூரிலிருந்து திறக்கப்படும் காவிரி தண்ணீர், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என, நான்கு கிளையாக பிரிந்தும், அதன் பின் அரசலாறு, வெட்டாறு, மண்ணியார், பாயினியாறு உட்பட, 36 கிளை ஆறுகளாக பிரிகிறது.
அதிலிருந்து, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில், 11 ஆயிரம் கி.மீ.,க்கு காவிரி தண்ணீர் பயணித்து, 10 லட்சம் ஏக்கருக்கு, பாசன வசதியை ஏற்படுத்துகிறது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், வரும் மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் போதிய நீர்வரத்து கிடைக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்காததால் விவசாயிகளிடையே சற்று கலக்கம் உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகா சட்டப்பூர்வமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை விட 3.5 மடங்கு அதிகமாக காவிரி நீரை மாநிலம் பெற்றிருந்தாலும், அதை சேமிக்கும் திறன் மாநிலத்திற்கு இல்லாததால் அதில் 60 சதவீதம் கடலில் கலந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்கவேண்டிய 177 டி.எம்.சி. தண்ணீரை விடவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை தமிழகத்துக்கு 667.67 டிஎம்சி (ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் கிடைத்துள்ளது.
அதிக மழையின் காரணமாக மேட்டூர் அணை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன, மேலும் பெரும்பாலான உபரி நீர் கடலில் விடப்பட்டது.
மொத்தம் இந்த பருவத்தில் 400 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு விடப்பட்டது. 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீர் ஆகும். ஒரு டி.எம்.சி. என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர். 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 24 லட்சம் லாரிகளில் தான் ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியும்.
பருவமழையின்போது, பல டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் ஓடி வீணாக கலக்கிறது. அந்த வகையில் ஆண்டுக்கு 100 முதல் 400 டி.எம்.சி. மழைநீர் கடலில் கலக்கிறது. பொதுவாக நொடிக்கு 2,600 கன அடி நீர் கடலில் கலக்கிறது. அதாவது, 4 நாட்களுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது.
காவிரியில் தடுப்பணைகள் கட்டினால் தண்ணீரை சேமிப்பதோடு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் ஆதாரம் பெருகவும் வழி கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
இதுபற்றி தமிழ்நாடு வாழை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் அஜீதன் கூறுகையில், மழைக்காலத்தில் எல்லா நீரையும் சேமித்து வைப்பது இயலாத காரியம். மேலும், சுற்றுச்சூழல் காரணங்களுக்காக உபரி நீரை கடலில் விட வேண்டும். இருப்பினும், சேமிப்பகத்தை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது
காவிரிப் படுகையில் 990 குளங்கள் உள்ளன. அவை அனைத்தையும் வடிவமைத்து பராமரித்தால் உபரி நீரை சேமிக்க முடியும். காவிரி போன்ற நதிகள் இணைப்புத் திட்டங்களும் தண்ணீரைப் பாதுகாக்க உதவும் என்றார்.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநிலத்திற்குள் நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.






