என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பன்னோக்கு மருத்துவமனை"
சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். #CM #AmmaMasterHealthCheckup
முழு உடல் பரிசோதனைக்கு பல தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மக்களால் இந்த பரிசோதனையை செய்து கொள்ள இயலவில்லை.
இதனை கருத்தில் கொண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, குறைந்த கட்டணத்தில் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்து, முதல்கட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆகிய திட்டங்களை கடந்த 1.3.2016 அன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் அம்மா கோல்ட் பரிசோதனைக்கு ஆயிரம் ரூபாயும், அம்மா டைமண்டு பரிசோதனைக்கு இரண்டாயிரம் ரூபாயும், அம்மா பிளாட்டினம் பரிசோதனைக்கு மூன்றாயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 26,900 நபர்கள் மேற்கண்ட பரிசோதனையை செய்து பயன்பெற்றுள்ளனர்.
இது தவிர, கிராமப் பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்ட கிராமப்புற மக்கள் கட்டணம் ஏதுமின்றி அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் செய்துகொள்ள, அம்மா ஆரோக்கியத் திட்டத்தையும் கடந்த 1.3.2016 அன்று தொடங்கப்பட்டது.
தற்போது 400 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 31 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 99 அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 25 லட்சம் நபர்கள் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.
அதேபோன்று, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிகிச்சை மருத்துவமனையில், பொதுமக்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில், 2 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் நவீன கருவிகளுடன் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று, அம்மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அம்மா கோல்ட் பரிசோதனையில் முழு இரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை (உணவுக்கு முன் - உணவுக்கு பின்), சிறுநீரக இரத்த பரிசோதனைகள், இரத்த கொழுப்பு பரிசோதனைகள், கல்லீரல் இரத்த பரிசோதனைகள், ஹெப்படைடிஸ் பி இரத்த பரிசோதனைகள், இரத்த வகை மற்றும் ஆர்.எச். பரிசோதனை, இருதய சுருள் படம், எண்ணியல் நெஞ்சு ஊடுகதிர் படம், மீயொலி பரிசோதனை (அல்ட்ரா சவுண்ட் அப்டமன்), கர்ப்பப்பை வாய் பரிசோதனை ஆகியவைகளும்;
அம்மா டைமன்ட் பரிசோதனையில் அம்மா கோல்ட் பரிசோதனைகளுடன் எதிரொலி இதய துடிப்பு அளவீடு, (எக்கோ) புரோஸ்டேட் பரிசோதனை (பிஎஸ்ஏ), தைராய்டு பரிசோதனைகள், ஹெச்பிஏ1சி ஆகிய பரிசோதனைகளும்;
அம்மா பிளாட்டினம் சிறப்பு பரிசோதனையில் அம்மா டைமன்ட் பரிசோதனைகளுடன் எண்ணியல் மார்பக சிறப்பு பரிசோதனை
டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதித்தன்மை ஆகிய பரிசோதனைகளும் செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். #CM #AmmaMasterHealthCheckup






