என் மலர்
நீங்கள் தேடியது "முத்துப்பேட்டை கொள்ளை"
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு பைபாஸ் சாலையில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 8-ந்தேதி இந்த கடையின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றுவிட்டனர். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கீழகாட்டை சேர்ந்த வீரையா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய குமரேசன், விஷ்வா என்ற 2 பேரை கடந்த 23-ந்தேதி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இப்பகுதியில் அவர்கள் பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்களின் கூட்டாளிகளான தம்பிக் கோட்டை கீழக்காடு எம்.கே.நகரை சேர்ந்த அறிவழகன் (23), பெருகவாழ்ந்தான் பெரியார் நகரை சேர்ந்த ஆனந்தம் (39), அதிராம்பட்டினம் ஏரிபுரக் கரையை சேர்ந்த பாக்யராஜ் (21) ஆகிய 3 பேரை தேடி வந்தனர். நேற்று தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பிடிபட்ட 5 கொள்ளையர்கள் மீது களப்பால் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது.






