என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவிகளோ திராவிட கழகத்தை அசைக்க முடியாது கி.வீரமணி பேச்சு"

    காவிகளோ, ஆவிகளோ திராவிட கழகத்தை அசைக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். #KVeeramani

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழக 75 -ம் ஆண்டு பவள விழா மாநில மாநாடு நடை பெற்றது. திராவிட கழக மாணவர் கழக மாநில துணைசெயலாளர் யாழ் திலீபன் தொடக்கவுரையாற்றினார்.

    செயலவை தலைவர் அறிவிக்கரசு கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். இதில் திராவிட மாணவர்களின் கல்வி உரிமையும் கடமையும் என்ற தலைப்பில் அதிரடி அன்பழகன், பூவை புலிகேசி, தமிழ்செல்வி ஆகியோர் பேசினர்.

    இனமான ஏடுகளின் நோக்கமும், தாக்கமும் என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு ஆடிட்டர் சண்முகம் அறிமுகவுரையாற்றினார். பொது செயலாளர் அன்புராஜ் கருத்துரையாற்றினார்.

    தொடர்ந்து ‘‘பெரியாரை சுவாசிப்போம்’’ என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் நேரு, கவிஞர்கள் திவ்யபாரதி, சந்தீப், தமிழருவி ஆகியோர் பேசினர்.

    இதையடுத்து திராவிட கழக தலைவர் கி வீரமணி புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    திராவிட கட்சியை எந்த கொம்பனாலும் ஆட்டி பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ முடியாது. காவிகளோ அல்லது ஆவிகளோ கூட இந்த இயக்கதைத அசைக்க முடியாது.

    தற்போது உள்ள அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் மாணவர்களை நெறிப்படுத்தி, பக்குவப்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டும். அது தான் நம் கடமை.

    பெரியாரின் நெறிகளை சுவாசித்தாலே போதும் , அதனை சொல்லி கொடுக்க வேண்டியதில்லை.

    கும்பகோணத்தில் தனி தனி பானை வைத்து அதில் ஒரு சமூகத்தினர் தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறியதால் திராவிட மாணவர் இயக்கம் தொடங்கியது. தண்ணீர் தான் மாணவர்களை சிந்திக்க வைத்துள்ளது.

    பெரியார் எந்த நூலகத்திலும் படிக்க வில்லை, பெரியார் நான்காம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆனால் அவர் படித்த நாட்களில் தண்ணீருக்காக பட்ட கஷ்டங்களை கொண்டு தான் திராவிட இயக்கம் உருவானது.

    திராவிட கழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் தான், தற்போது தமிழ்நாட்டில் எழுச்சி மிக்கவர்களாக உள்ளனர்.

    தமிழ்நாட்டில் தற்போது கடவுளுக்கே பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சாமி சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாலையில் திராவிட மாணவர்களின் பேரணி மற்றும் அணிவகுப்பு திருநாராயணபுரம் சாலையிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கடலங்குடி தெருவில் உள்ள மாநாட்டு அரங்கில் முடிவடைந்தது. #KVeeramani

    ×