என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவாரம் கும்கி யானை"

    தேவாரம் அருகே 7 பேரை பலி வாங்கிய மக்னா யானையை பிடிக்க கும்கி யானை தேவாரம் வந்தது. #MagnaElephant

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் போடி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக மக்னா யானை அட்டகாசம் செய்து வருகிறது. விளைநிலங்ளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் பல விவசாய தொழிலாளர்களையும் தாக்கி கொன்றது. இந்த யானையின் கோர தாக்குதலுக்கு இது வரை 7 பேர் பலியாகியுள்ளனர்.

    வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டருக்கு கிராம மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கும்கி யானை வரவழைக்கப்பட்டு மக்னாவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டம் டாப்சிலிப் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் ஆனைமலை காப்பக துணை இயக்குனர் டாப் சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகளை அனுப்ப உறுதி அளித்தார்.

    அதன்படி வனச்சரகர் நவீன் மேற்பார்வையில் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இருந்து கலீம் என்ற 55 வயதுடைய கும்கி யானை லாரியில் தேவாரத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானையுடன் பாகன்களும் 10 உதவியாளர்களும் வந்தனர்.

    அவர்கள் இன்று முதல் மக்னா யானையை பிடிக்க கும்கி யானையை அனுப்பும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றொரு கும்கி யானை வரவழைக்கப்படுகிறது.

    2 கும்கி யானைகளும் மக்னா யானையை பிடித்து விடும் என்று வனத்துறையினர் உறுதியளித்துள்ளதால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    இது குறித்து தேனி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் கூறுகையில், தற்போது கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு சோளத்தட்டை, தென்னை மரக்கிளை, கம்பு, ஆலமரக்கிளை ஆகியவை உணவாக தரப்பட்டுள்ளது. 10 உதவியாளர்களும் கால்நடை மருத்துவர் தலைமையில் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினரும் வந்துள்ளனர். நாளை மாரியப்பன் என்ற மற்றொரு கும்கி யானை வர உள்ளது. 2 யானைகளும் சேர்ந்து வனப்பகுதியில் பதுங்கியுள்ள மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. அதன் பிறகு அந்த யானை பொள்ளாச்சிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். #MagnaElephant

    ×