என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல் வீடு வெள்ளம்"

    ஒகேனக்கல்லில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. #Rain #Keralasouthwestmonsoon

    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவ மழை தீவிரம் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பின.

    அதில் இருந்து உபரி நீர் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி அளவுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் இருபுறமும் கரைகளுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு கடந்த இரு தினங்களாக நீர்வரத்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் வந்தது. நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று சரிந்து 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    தொடர்ந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர், ஊட்டமலை ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு 20-க்கும்மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.


    காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லில் பாறைகள் தெரியாத அளவிற்கு மெயினருவி, ஐந்தருவி, காவிரி ஆற்று பகுதி ஆகிய இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசலில் செல்ல மாவட்ட நிர்வாகம் மறு அறிவிப்பு வெளியிடும் வரை தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறக்காமல் இருக்க தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்து பொதுமக்களை பத்திரம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அவர்களை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ஒகேனக்கல்லில் இருந்து கரைபுரண்டு ஒடும் வெள்ள நீர் ஊட்டமலை வழியாக பென்னாகரம், நாகமரை, செல்லமுடி, ஏர்கோல்பட்டி, சித்திரப்பட்டி, பூச்சியூர், குருகலையனூர் ஆகிய ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்கிறது. அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோர மற்றும் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலையிலும் இன்று வெள்ளநீர் வீடுகளுக்கு புகுந்தது. அங்கிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    ×