என் மலர்
நீங்கள் தேடியது "கோவை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன்"
கவுண்டம்பாளையம்:
கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் மாங்கரை, தூமனூர், சேம்புகரை, கொண்டனூர், கொண்டனூர் புதூர், பனப்பள்ளி, கண்டிவெளி, ஜம்புகண்டி, ஆனைகட்டி, மேல்பாவி, செங்குட்டை, கோபனாரி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்கள் கேரளா வனப்பகுதியுடன் ஒட்டியுள்ளன. கேரளா அட்டப்பட்டி, அகளி உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமுள்ளது.
இதன் காரணமாக இந்த மலைக்கிராமங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து சிறப்பு படை அமைக்கப்பட்டு இரவு பகலாக நக்சல் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொண்டனூர் அரசு பள்ளியில் ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆர்.வி.சி.நடராஜன் வரவேற்று பேசினார். நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் மற்றும் வயதான ஆதிவாசி மக்களுக்கு போர்வைகள் மாற்று திறனாளிகள் மூன்று பேருக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ஆதிவாசி கிராமங்களில் சந்தேகத்திற்குரிய ஆள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மேலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும், சேவைகளையும் செய்து கொடுக்க மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து ஆதிவாசி மக்களிடம் அவர்கள் பகுதியிலுள்ள குறைகளை கேட்டறிந்தார். இதில் ஆதிவாசி மக்கள் கூறும்போது, தங்கள் பகுதிக்கு மின் விளக்கு வசதி, வீடுகளுக்கு பட்டா, யானை நடமாட்ட்த்தை தடுக்க அகழி அமைத்தல், விவசாயி நிலங்களுக்கு சோலார் பம்பு செட்டுகள் அமைத்துதர வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர்.
முன்னதாக மரக்கன்றுகளை நட்டுவைத்து, ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்டு நடமாட்டம் இல்லை. ஆதிவாசி மக்கள் காவல் துறைக்கும், நக்சல் தடுப்பு பிரிவு படைக்கும் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். 24 மணி நேரமும் நக்சல் தடுப்பு பிரிவு படை வீரர்கள் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் துடியலூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், சுந்தரராஜன், கோவை வனத்துறை ரேஞ்சர் சுரேஷ், நிழல் மைய ஒருங்கிணைப்பாளர் முருகன், ரோட்டரி கோவை சென்ரல் சங்க முன்னாள் தலைவர் மாணிக்கம், ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் குப்புராஜ், ஸ்ரீதர், சங்கீதா, ராம்சன், ஆனந்த் உட்பட நக்சல் தடுப்பு பிரிவு படைவீரர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டை ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து நடனமாடி வரவேற்றனர்.






