என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakasi Calendars"

    • மக்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புது ரக காலண்டர்களும் தயாராகி உள்ளன.
    • ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்தவுடன் அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வெளியாகும்.

    காலண்டர் எனப்படும் நாட்காட்டி அன்றைய நாளின் அர்த்தம் குறித்த விளக்கத்தை கூறினாலும், சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாகவே பார்க்கப்படுகிறது. யுகங்கள் நவீனமானாலும், காகிதத்தில் அச்சிடப்பட்டு நாள்தோறும் கண் விழித்ததும் கைதொடும் காலண்டர் எதிர்வரும் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது.

    கலண்டே என்னும் லத்தீன் மொழி சொல்லில் இருந்து உருவாகி காலப்போக்கில் காலண்டர் ஆனது. ஆண்டு, மாதம், நாள், கால நிகழ்வுகளை தாங்கி சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலும் மொழி, சமுதாயம், பண்பாடு வகைகளிலும் பிரிக்கப்படுகிறது. குறிப்பாக இந்து நாட் காட்டியில் வடிவமைக்கப்பட்ட காலண்டரில் பஞ்சாங்கம், திதி, 27 நாட்சத்திரங்கள், நல்ல நேரம், யோகம், கர்ணம் ஆகியவை இடம்பெறுகிறது.

    அந்த வகையில் வரப்போகும் 2024 ஆம் புத்தாண்டை வரவேற்க குட்டி ஜப்பான் என்று புகழப்படும் அச்சக நகரான சிவகாசியில் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024-க்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளுக்கு முன்னோட்டமாக, புத்தாண்டு தினசரி காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஆண்டு புதிய வரவாக, பவளக்கல் காலண்டர் மற்றும் க்யூஆர் கோடு அச்சடித்த காலண்டர்கள் அறிமுகமாகிறது.

    அச்சகத்தொழிலில் மெச்சத்தக்க வகையில் செயல்படும் சிவகாசியில் தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் தயாரிப்புக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் அச்சகங்கள் உலக தரத்தில் இருப்பதால், இங்கு தயாராகும் காலண்டர்களுக்கு பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

    தினசரி காலண்டர்களில் வழக்கமான காலண்டர்களுடன், டை கட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், சில்வர் பாயில்ஸ் காலண்டர், கோல்டு பாயில்ஸ் காலண்டர், மெகா சைஸ் காலண்டர், கடிகார காலண்டர், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், சுவாமி படங்கள், அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள், பிரபல நடிகர்கள், இந்தியாவின் புகழ்மிக்க இடங்கள், உலக புகழ்பெற்ற இடங்கள், இயற்கை காட்சிகள் என பல நூறு வகைகளில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் புதிய வகையிலான காலண்டர் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புதிய வரவாக, பவளக்கல் மற்றும் க்யூஆர் கோடுடன் தினசரி காலண்டர் வருகின்றது. இந்த காலண்டரில் உள்ள சிறப்புகள் தினசரி தாளில் ஒரு க்யூஆர் கோர்டு அடையாளம் இருக்கும். இதனை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால், அன்றைய நாளின் முக்கிய நிகழ்வு, முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள், பிரபலங்களை பற்றிய தகவல்கள், கோவில் திருவிழாக்கள், கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறியலாம்.

    பவளக்கல் காலண்டரில் கல்கள் பதிக்கப்பட்டு தத்ரூபமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கியூ ஆர் கோடுடன் தயார் செய்யப்பட்ட காலண்டர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுபோக வாட்ச் உடன் கூடிய டேபிள் காலண்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்தவுடன் அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வெளியாகும். பஞ்சாங்கம் வெளியானவுடன், வரும் புத்தாண்டிற்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும். நாள், நட்சத்திரம், நல்ல நேரம், திதி மற்றும் பல்வேறு தகவல்களுடன் காலண்டர்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து புத்தாண்டிற்கான புது வகை வடிவமைப்பு மற்றும் டிசைன்கள் உருவாக்கப்படும். காலண்டர்கள் எத்தனை வடிவங்களில், என்னென்ன டிசைன்களில், என்னென்ன படங்களில் தயாரிக்கப்படுகிறதோ அவைகள் அத்தனையும் இணைத்து, புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கப்பட்டு ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வழக்கம்.

    அவ்வாறு தயாராகும் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று பிரமாண்டமாக வெளியிடப்படும். இதற்காக காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் காலண்டர் ஆல்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த காலண்டர்கள் ஆர்டர்கள் சேகரிக்கும் முகவர்களை வரவழைத்து, புத்தாண்டு காலண்டர் ஆல்பங்களை வழங்குவார்கள்.

    அதனை பெற்றுச் செல்லும் முகவர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இந்த ஆல்பங்களை காண்பித்து, அவர்களுக்கு தேவைப்படும் வகையிலான காலண்டர்களை ஆர்டர் எடுத்து, சிவகாசி காலண்டர் நிறுவனத்திற்கு அனுப்புவார்கள். முகவர்கள் கேட்டுள்ள டிசைன்களில் காலண்டர்கள் தயாரித்து, குறிப்பிட்ட நாட்களில் அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் புத்தாண்டிற்கான காலண்டர் சீசன், புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி 2-வது வாரம் வரை, அதாவது தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாள் வரை தொடர்ந்து நடைபெறும். சுமார் 5 மாதங்கள், சிவகாசியில் உள்ள பிரபல காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருவார்கள்.

    இதுதொடர்பாக காலண்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளருமான ஜெய்சங்கர் கூறுகையில், ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டிற்கும் அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிப்பது காலண்டர்கள் தான். தினமும் காலையில் கண் விழிக்கும்போது அன்றைய நாளில் உள்ள விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகள், நல்ல நேரம், முக்கிய குறிப்புகளை பார்ப்பதில் அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

    ஒரு ஆண்டு முழுவதும் வீட்டில் இருக்கும் காலண்டர்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற வகையில் தரமான அட்டை, கண்ணை கவரும் படங்கள், புதுப்புது வடிவங்களில் காலண்டர்களை தயாரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்களை தயாரிப்பதால், இந்த ஆண்டு புது வரவு என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.

    மக்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புது ரக காலண்டர்களும் தயாராகி உள்ளன. காலண்டர்களின் விலை இந்த ஆண்டு சுமார் 5 சதவீதம் அளவிற்கு உயரும் வாய்ப்புள்ளது. காலண்டர் தயாரிக்க தேவைப்படும் முக்கிய பொருட்களான பேப்பர், அட்டை மற்றும் மூலப்பொருட்களின் விலை கடந்த ஆண்டில் இருந்ததைப்போலவே உள்ளது. அலுவலக பயன்பாட்டிற்கான மின் கட்டண உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் காலண்டர்களின் விலை சற்று கூடுதலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வும் யாரையும் பாதிக்காத வகையில் தான் இருக்கும். மேலும் வரும் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சியிலிருந்து 10 சதவீதம் கூடுதலாக ஆர்டர் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம். மேலும் வழக்கம் போல இந்த ஆண்டும் காலண்டர்கள் விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    ×