என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop employee"

    குஜராத்தில் ரோட்டில் கிடந்த 10 லட்சம் ரூபாயை கண்டெடுத்த கடை ஊழியர் அந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். #10lakhs

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உம்ரா பகுதியில் ஒரு ஜவுளி கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருபவர் திலீப்.

    நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சென்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு கடைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    வழியில் ரோட்டோரத்தில் பெரிய பை ஒன்று கிடப்பதை கண்டார். அந்த பையை எடுத்து திறந்து பார்த்த திலீப்புக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அந்த பைக்குள் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    மொத்தம் 10 லட்சம் ரூபாய் அந்த பைக்குள் இருந்தது. அந்த பணப் பையை யாரோ தவற விட்டு இருக்கிறார்கள் என்பதை திலீப் உணர்ந்து கொண்டார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பது அவருக்கு உடனடியாக புரியவில்லை.

    பணத்தை தவற விட்டவர் தேடி வரக்கூடும் என்ற எண்ணத்தில் சிறிது நேரம் அவர் அந்த பகுதியில் காத்து நின்றார். ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து பணப்பையுடன் அவர் தனது கடைக்கு சென்றார்.

    அங்கிருந்த ஒரு ஊழியரிடம் அவர் ரோட்டு ஓரத்தில் கிடந்த பணப்பை பற்றி கூறினார். அதற்கு அந்த ஊழியர் 10 லட்சம் ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று யோசனை தெரிவித்தார்.

    அதை ஏற்க மறுத்த திலீப், “உழைத்து சம்பாதிக்கும் பணமே எனக்கு போதும்” என்று கூறி விட்டு 10 லட்சம் ரூபாயை போலீஸ் நிலையத்தில் கொண்டு போய் ஒப்படைத்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது பணக்காரர் ஒருவர் அந்த பணத்தை தவற விட்டு இருப்பது தெரிந்தது. அவரை அடையாளம் கண்டுபிடித்த போலீசார் அவரை வரவழைத்தனர்.

    அவரிடம் திலீப் 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்ட நபர் அது திரும்ப கிடைத்ததை நம்ப முடியாதபடி மகிழ்ச்சி அடைந்தார். அதோடு அவர் திலீப்பின் நேர்மையை பாராட்டி தனது பணப்பையில் இருந்து 1 லட்சம் ரூபாயை எடுத்து கொடுத்தார்.

    இதற்கிடையே உம்ரா பகுதி நகைக்கடைக்காரர் ஒருவரும் திலீப் நேர்மையை பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்தார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு திலீப்பின் நேர்மைக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்து இருப்பதாக போலீசார் பாராட்டி உள்ளனர். #10lakhs

    ×