search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Friend Inquired"

    காவிரி மற்றும் பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பள்ளி தோழி ஒருவர் நலம் விசாரித்தார். #ErodeFloods #EdappadiPalaniswami
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு நாள் முழுவதும் காவிரி மற்றும் பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    ஈரோடு, பவானி, கருங்கல் பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்து சென்று பார்த்தார்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

    முதல்-அமைச்சர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்த போது சில சுராஸ்ய சம்பவங்களும் நடந்து உள்ளது.

    பவானி-குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்றபடி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தை பார்த்தார். அப்போது ஒரு பெண் முதல்வர் அருகே வந்தார்.

    பிறகு அந்தப் பெண் முதல்வரை பார்த்து “ஏனுங்க என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குதா..? பவானி அரசு பள்ளியில் நம்ம ஒண்ணா படிச்சோமே... நலமா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

    அந்த பெண்ணை பார்த்து முகம் மலர்ந்த முதல்வரும் “ஆமா..நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா..?” என்று கேட்டார்.

    அந்த பெண்ணும் நல்லா இருக்கேன் என்று கூறினார்.

    பிறகு தன்னுடன் வந்தவர்களிடம் “பவானி வந்ததும் பழைய ஞாபகம் வருகிறது. இந்த பகுதியில் நான் நடந்து செல்லாத இடமே கிடையாது.” என்று கூறி பழைய நினைவை நினைவு கூர்ந்தார் முதல்வர்.

    பவானி மார்க்கெட் பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரில் நடந்து சென்ற போது தண்ணீரில் ஒரு செருப்பு மட்டும் தனியாக மிதந்தது. இதை கண்ட முதல்வர்  “ஏம்ப்பா... இங்க ஒரு செருப்பு மிதக்குதே.. யாருடையது?” என்று கேட்டார்.

    அப்போது நிருபர்கள் நின்ற பகுதியிலிருந்து ஒரு நிருபர் “அது என்னுடைய செருப்புதான்” என்று கூறி அதை எடுக்க வந்தார்.

    ஆனால் கூட்டத்தில் அவரால் முன்னேறி வர முடியவில்லை. உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வழிவிடுங்க... என்று கூறினார்.

    அனைவரும் அவருக்கு வழிவிட செருப்பை மீண்டும் காலில் அணிந்தபடி அந்த நிருபர் சென்றார். #ErodeFloods #EdappadiPalaniswami
    ×