search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice price rise"

    • சந்தையில் பாரம்பரியம் மிக்க நல்ல நெல் ரகங்கள் ஏராளமானவை புத்துயிர் பெற்றுள்ளது.
    • ஆந்திர மாநில நெல் ரகமான பி.பி.டி. 5204 மற்றும் தெலுங்கானாவின் நெல் ரகமான ஆர்.என்.ஆர். ஆகியவற்றின் வரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி:

    தென்னிந்திய உணவு வகைகளில் அரிசி சாதம் பிரதானமாக இடம்பெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் அரிசி தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆந்திரா மாநிலம் முக்கிய பங்கு வைத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ள காரணத்தால் விலை உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சியை சேர்ந்த வேளாண் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சந்தையில் பாரம்பரியம் மிக்க நல்ல நெல் ரகங்கள் ஏராளமானவை புத்துயிர் பெற்றுள்ளது. தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரத்து குறைந்துள்ளது.

    இந்நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் அரிசியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.10 கிலோ வரை உயரக்கூடும் என அரிசி ஆலை அதிபர்கள் கூறுகிறார்கள். கோவிட்-19 ஊரடங்கின்போது தேவை குறைந்ததால் அதிக அளவில் நெல் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் அவற்றின் இருப்புக்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. மேலும் பிற மாநிலங்களில் இருந்து நெல்வரத்தும் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றார்.

    இதற்கிடையே ஆந்திர மாநில நெல் ரகமான பி.பி.டி. 5204 மற்றும் தெலுங்கானாவின் நெல் ரகமான ஆர்.என்.ஆர். ஆகியவற்றின் வரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நுண்ணிய நெல் வகைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆலைகளின் நெல் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், பிரபலமான அரிசி வகைகளின் சில்லறை விலை இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு ஒவ்வொரு நெல் மூட்டையும் (ஒரு மூடைக்கு 63 கிலோ) 1,400 ரூபாய்க்கு வியாபாரிகளுக்கு விற்றேன். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு மூட்டைக்கு குறைந்தபட்சம் ரூ.300 கூடுதலாக இருந்தது என்று லால்குடியைச் சேர்ந்த விவசாயி வெற்றிவேல் கூறினார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து கொண்டு வரப்படும் நெல் ரகங்கள் குறைந்த விலையில் சந்தையைப் பிடிக்கின்றன. தற்போது சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் இரண்டாம் பருவ சாகுபடியில் நிலைமை மாறலாம் என்றார்.

    இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் முன்னணி நிர்வாகி ராஜேந்திரன் கூறுகையில், தடிமனான நெல் ரகங்கள் நமது நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. மக்கள் உணவுக்கு நல்ல அரிசி வகைகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, இப்போது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து நல்ல ரகங்கள் நமது அரிசி ஆலைகளுக்கு வந்திருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை பெற்ற நெல் அளவு மற்ற ஆண்டுகளை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. இதனால் நுண்ணிய ரகங்களுக்கு சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆந்திரா பி.பி.டி. மற்றும் அம்மன் பொன்னி ரகங்களுக்குச் சென்ற ஆண்டு திருச்சி விவசாயிகளுக்கு ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.1,400 என்ற விலை கிடைத்தது என்றார்.

    இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர் ஆர்.ஏ.ரகுராமன் கூறுகையில், திருச்சியில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நன்றாக இருந்தது. பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. நெல் வகைகளின் விலையில் இது ஒரு சாதனை ஆண்டாக இருக்கும். 2022-ம் ஆண்டில், சிறந்த வகைகளுக்கான தேவை உச்சத்தை எட்டியதைக் கண்டோம். ஒரு மூட்டை ரூ.1,800 வரை கூட விலை உயர்ந்தது. ஆகவே இந்த ஆண்டு நல்ல கிராக்கியை எதிர்பார்த்து, மில் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நெல் இருப்புக்களை குவித்து வருகின்றனர் என்று கூறினார்.

    மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு நெல் அரிசி வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் சின்னசாமி கூறும்போது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பி.பி.டி. ரக நெல் அதிக அளவில் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது அம்மாநில அரசுகள் இந்த ஆண்டு முதல் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. இதனால் இங்கு வரத்து குறைந்துள்ளது.

    அதே நேரம் தமிழகத்தில் தேவைகளை அதிகம் பூர்த்தி செய்வதில் கர்நாடகம் இருக்கிறது. அங்கு தற்போது நெல் விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சென்னை மாநகரின் அரிசி தேவையை பூர்த்தி செய்வதில் மட்டுமே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. வேறு பகுதிகளுக்கு அதிகம் கர்நாடக அரிசி வருகிறது. அரிசி விலையை பொருத்தமட்டில் 2022-ம் ஆண்டின் நிலையே நீடிக்கிறது என்றார்.

    ×