search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajendra Bahuguna"

    எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் எனது தந்தை மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளதாக ராஜேந்திர பகுகுணாவின் மகன் அஜய் கூறினார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (வயது 59). காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான இவர் கடந்த 2004-2005-ம் ஆண்டில் என்.டி.திவாரி தலைமையிலான மந்திரி சபையில் மந்திரியாக பதவி வகித்தவர். இவர் மகன் அஜய் பகுகுணாவுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக அவரது மருமகள் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனால் அவர் அவமானம் அடைந்தார். நேற்று ராஜேந்திர பகுகுணா தனது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஏறினார். பின்னர் போலீசுக்கு போன் செய்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மிரட்டல் விடுத்தார்.

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை கீழே இறங்கி வருமாறு கூறினார்கள். அதற்குள் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவர் கீழே இறங்கி வராமல் அடம்பிடித்தபடி இருந்தார். நீண்ட நேரம் போலீசார் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

    திடீரென அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பொதுமக்கள் மற்றும் போலீஸ் கண் எதிரில் நடந்தது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

    போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ராஜேந்திர பகுகுணாவின் மகன் அஜய் கூறும்போது எனக்கும், எனது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் எனது தந்தை மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். பணத்தை பறிக்க அவர் மீது தனது மனைவி வீண் பழி சுமத்தி விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மருமகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ×