search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain Relief Fund"

    புதுவை அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் கேரளத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி எண்ணப்படி அதிகளவு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KeralaFloods #Narayanasamy
    புதுச்சேரி:

    கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் இருந்து அந்த மாநிலத்துக்கு நிவாரணத் தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்டை மாநில மான தமிழகம் அதிகளவு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கி வருகிறது.



    தமிழகத்தைப் போல புதுவை மாநிலமும் உதவி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி விருப்பம் தெரிவித்தார். அதற்காக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    இதை ஏற்று அரசு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினர்.

    இந்த நிலையில் கேரள அரசு முல்லைப் பெரியாறில் இருந்து தமிழக அரசு நீரைத் திறந்து விட்டதால் தான் வெள்ள சேதம் ஏற்பட்டது என்றும், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக்குறைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இதையடுத்து உச்சநீதிமன்றமும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்க உயரத்தை குறைக்கும்படி உத்தரவிட்டது. கேரள அரசின் இந்தச் செயல் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கேரளத்துக்கு தொடர்ந்து உதவ வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் அவ்வாறு உதவினாலும் கேரள மக்கள் தமிழர்கள் மீது அன்பு காட்ட மாட்டார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவை அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் தங்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்காமல் உள்ளனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து கொள்ள அனுமதிக்க கடிதம் கொடுத்திருந்தாலும், ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்தைப் பிடித்தம் செய்து விருப்பம் தெரிவித்து தனிப்பட்ட முறையில் கையொப்பமிட்டு கடிதம் வழங்க வேண்டும்.

    அவ்வாறான கடித நகல் கடந்த வியாழக்கிழமை துறைத் தலைமை அலுவலகம் சார்பில் அனைத்து ஊழியர்களிடமும் வழங்கப்பட்டது. ஆனால் அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் கேரளத்துக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் கடிதம் தரமறுத்து வருவதாகவும் தெரிகிறது.

    இதனால் கேரள மக்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எண்ணப்படி அதிகளவு நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KeralaFloods #Narayanasamy

    ×