search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway staff clash"

    கோட்ட ரெயில்வே தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேரை ரெயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு தொழிற்சங்க அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

    மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் 2 தொழிற்சங்க அலுவலகங்களுக்கு இடையில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் ஒரு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், கடந்த 20-ந்தேதி மதுரை கோட்ட ரெயில்வே தொழிலாளர் நலத்துறை அதிகாரியை நேரடியாக சந்திக்க சென்றனர்.

    அப்போது அங்கு மற்றொரு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் இருந்தனர். ரெயில்வே தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்பாக இரு சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு சங்கத்தினரையும் ரெயில்வே தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் வெளியே வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இரு சங்கத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு சங்கங்களை சேர்ந்த பலருக்கும் காயம் ஏற்பட்டது. தொழிற்சங்கத்தினர் மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உத்தரவிட்டார். அதன்பேரில் ரெயில்வே துறை அதிகாரிகள் மோதலில் ஈடுபட்ட இரு சங்கத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    மோதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மோதலில ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மதுரை கோட்ட அலுவலகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 4 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் அந்த 4 பேர் யார்? எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்? என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்க ரெயில்வே நிர்வாகம் மறுத்துவிட்டது.

    தொழிற்சங்க நிர்வாகிகள் வட்டாரத்தில் சிலரிடம் விசாரித்தபோது, “மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் 2 தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    மோதலின்போது அடிதடியில் ஈடுபட்ட ஒரு சிலர் மீது ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையீடு செய்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.

    கோட்ட ரெயில்வே தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேரை ரெயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×