search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway job cheating"

    ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ. 17 ½ லட்சம் மோசடி குறித்து கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Cheating

    சென்னை:

    செங்குன்றம் புள்ளி லைனைச்சேர்ந்த கலைவாணன், கமலக்கண்ணன், பிரபாகரன், சண்முகம், ராஜேஷ், கலைமணி, தில்லைநகர் தெரு திருவாகர் ஆகியோர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நாங்கள் சிறுவயது முதலே நண்பர்கள். நாங்கள் அனைவரும் அரசு வேலையில் சேர முயற்சி செய்து வந்தோம். அப்போது சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்.

    அவரது மாமா ரெயில்வேயில் பெரிய பதவியில் இருப்பதாகவும் அவர் மூலம் பலருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தந்து இருப்பதாகவும், எங்களுக்கும் அதுபோல் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அவரது மனைவி மீனா, மகள் நந்தினியும் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் ரெயில்வே வேலைக்காக நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும், வாகனங்களை விற்றும் தலா ஒருவருக்கு ரூ.2 ½ லட்சம் வீதம் 7 பேரும் சேர்ந்து ரூ.17 ½ லட்சம் பணத்தை கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மீனா, நந்தினி முன்னிலையில் பிரபாகரனிடம் கொடுத்தோம்.

    ஆனால் அதன்பிறகு எங்களுக்கு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் அவர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம். பணத்தையும் திரும்பி தராமல் சாக்கு போக்கு கூறி வந்தனர். அதன்பிறகு எங்களுடைய போனையும் இவர்கள் எடுப்பதில்லை.

    நேரில் சென்று கேட்ட போது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். லோக்கல் போலீசில் செல்வாக்கு இருப்பதாகவும் மிரட்டினார்கள். எனவே அவரிடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டுகிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Cheating

    ×