search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Attack To Youngsters"

    அரசின் திட்ட கணக்கெடுப்பு பணிக்காக வந்த 7 வாலிபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் குழந்தை கடத்தல் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகப்படி செல்லும் நபர்களை பொதுமக்கள் தாக்கி கொல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. குழந்தை கடத்தல் குறித்து பொதுமக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று போலீசார் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசின் திட்ட கணக்கெடுப்பு பணிக்காக வந்த 7 வாலிபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி (23), யுவனேஸ்வரன் (24), முத்துசாமி (24), பிரேம்குமார் (24), மணிகண்டன் (38), ஜஸ்டின் (24).

    இந்த நிலையில் இவர்கள் 6 பேரும் திருவாரூர் மாவட்டத்தில் அரசின் இலவச ஆடு, கோழி ஆகியவற்றுக்கு கொட்டகை அமைத்து கொடுப்பதற்கான டெண்டர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதலோடு பல்வேறு இடங்களில் அவர்கள் சென்று கொட்டகை அமைக்க கணக்கெடுப்பு பணியை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கூத்தாநல்லூர் அருகே கமலாபுரம் பகுதியில் சத்திய மூர்த்தி உள்பட 6 பேரும் கணக்கெடுப்பு பணிக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த டிரைவர் அய்யப்பன் (42) என்பவரும் சென்றிருந்தார்.

    கணக்கெடுப்பு பணியை முடிந்த இவர்கள் 7 பேரும், அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற சிலர், நீங்கள் யார்? வெளியூர்காரர்கள் போல் தெரிகிறதே? இங்கு என்ன வேலை? என்று கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு அவர்கள் சரியான பதிலை கூறாமல் இருந்தனர்.

    இதனால் அவர்கள் 7 பேரும் குழந்தை கடத்தல் கும்பலாக இருக்குமோ? என்று கிராம மக்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து சிலர், சத்தியமூர்த்தி உள்பட 7 பேரையும் சுற்றி வளைத்து கைகளால் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.

    இதை கண்ட சிலர், இந்த சம்பவம் பற்றி வடபாதி மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து , 7 வாலிபர்களையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் போலீசார் , அந்த வாலிபர்களிடம் விசாரித்தனர். மேலும் திருவாரூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை போலீசார் தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது 7 வாலிபர்களும், கணக்கெடுப்பு பணிக்காக அனுப்பப்பட்டவர்கள் என்பது உறுதியானது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


    ×