என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private School Bus Collide"

    குன்னத்தூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி 2 என்ஜினீயரிங் மாணவர்கள் பலியாகினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரதீப்குமார் (வயது 20). திருப்பூர் மும்மூர்த்தி நகரை சேர்ந்த பெருமாளின் மகன் வெங்கடேஷ் (20). நண்பர்களான இவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

    மும்மூர்த்தி நகரில் உள்ள வெங்கடேஷ் தினமும் பஸ்சில் குன்னத்தூருக்கு செல்வார். குன்னத்தூரில் இருந்து நண்பர் பிரதீப்குமாருடன் கல்லூரிக்கு செல்வார். கல்லூரி முடிந்த பின்னரும் இருவரும் ஒரே மேட்டார் சைக்கிளில் வீடு திருப்புவார்கள். நேற்றும் வழக்கம்போல் கல்லூரி முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரதீப்குமார் ஓட்டினார். பின்னால் வெங்கடேஷ் அமர்ந்திருந்தார். குன்னத்தூர் அடுத்த சித்தாண்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.

    அப்போது ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் கடைசி மாணவியை பழையபாளையத்தில் இறக்கி விட வந்தது. பஸ்சை தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்த ரத்தினம் (56) என்பவர் ஓட்டி வந்தார். சித்தாண்டிபாளையத்தில் வந்தபோது பள்ளி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மாணவர்கள் சாலையில் விழுந்தனர். இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த பிரதீப்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் வெங்கடேஷ் உயிருக்கு போராடினார்.

    தகவல் கிடைத்ததும் குன்னத்தூர் போலீசார் தவமணி சம்பவ இடத்திற்கு வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெங்கடேசை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் வெங்கடேசும் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்தில் பலியான பிரதீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான வெங்கடேசின் தந்தை கடந்த வருடம் மாரடைப்பால் திடீரென இறந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்காக நாளை திதி கொடுக்க இருந்தது. இந்தநிலையில் தந்தை இறந்த முதல் நாள் மகனும் பலியான சம்பவம் அவரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    ×