search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry fireaccident"

    புதுவையில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி நகரின் பிரதான வீதியில் அடுத்தடுத்து கடைகள் உள்ளது.

    பிளாஸ்டிக் மொத்த வியாபாரிகள் இந்த பகுதியில் அதிக அளவில் கடைகள் வைத்துள்ளனர். இவர்கள் கடையோடு பிளாஸ்டிக் குடோன்களையும் அமைத்து உள்ளனர்.

    நகரின் மிக நெரிசலான பகுதியான இங்கு நேற்று இரவு 11 மணியளவில் ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. இதில் அந்த கடையில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ வேகமாக மளமளவென அருகில் உள்ள பிளாஸ்டிக் குடோனுக்கு பரவியது.

    இதனையடுத்து தகவல் அறிந்த புதுவை தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 வாகனங்களில் வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

    தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதனால் தீயணைப்பு வீரர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிளாஸ்டிக் கரும்புகையால் மூச்சு விட முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அந்த பகுதியை சுற்றி உள்ள மக்களை போலீசார் வெளியேற்றினர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க அந்த பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    கட்டுக்குள் அடங்காத தீயை அணைக்க கோரிமேடு, வில்லியனூர், சேதராப்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு வண்டியும் வந்து தீயை அணைத்தனர்.

    சுமார் 5½ மணி நேரம் போராடி அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    பிளாஸ்டிக் தீயை அணைக்கும் திரவம் கலந்த நுரையுடன் கூடிய நீர் இல்லாததால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் நவீன கருவிகளும் இல்லாததால் தீயை போராடி அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இருப்பினும் தீயணைப்பு வீரர்களின் சாமர்த்தியத்தால் அடுத்து இருந்த குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேலும் உருளையன்பேட்டை மற்றும் போக்குவரத்து போலீசார் தீயை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவா தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து தீயணைப்பு வீரர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டனர். சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி தீயணைப்பு வாகனம் வர உதவி செய்தனர்.

    ஆனாலும், இதுவரை சேத மதிப்பு கணக்கிடப்படவில்லை. இருப்பினும் லட்சக்கணக்கில் சேதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? பட்டாசு காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×