search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opposition to the demolition of the monastery"

    • 2-வது நாளாக போராட்டம்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது.

    இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

    இதையடுத்து நேற்று காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி 'சீல்' வைத்தனர்.

    இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

    அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

    அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பொக்லைன் எந்திரங்கள் அகற்றம் தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த போராட்டம் இரவு வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×