என் மலர்
நீங்கள் தேடியது "omni van accident"
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த திருச்சிற்றம்பலம் பட்டானூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). தச்சு தொழிலாளி. இன்று காலை தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் அகஸ்டின், ருத்ரன், வரதன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மெயின் ரோட்டில் உள்ள பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.
பூத்துறை சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது செஞ்சி ஆட்டு சந்தையில் இருந்து ஆடுகளை ஏற்றிக் கொண்டு சுல்தான் பேட்டைக்கு வந்த ஆம்னி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அருள்தாஸ், அவரது மனைவி ஐஸ்வர்யா மற்றும் 3 குழந்தைகள் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்ததும் ஆம்னி வேனை ஓட்டி வந்த சுல்தான்பேட்டையை சேர்ந்த ரகமத்துல்லா பயந்து வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன் வேன் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய ஆம்னி வேனின் 4 டயர்களையும் கத்தியால் குத்தி பஞ்சராக்கினர்.
இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






