search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nominated bjp mlas"

    எந்த தடை போட்டாலும் அதை மீறி புதுவை சட்டசபைக்குள் நாளை நுழைவோம் என்று நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். #nominatedbjpmlas

    புதுச்சேரி:

    புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர, 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிப்பது வழக்கம்.

    மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அவர்களை நியமிக்கும். ஆனால், இந்த தடவை மாநில அரசின் பரிந்துரை இல்லாமலேயே கடந்த ஆண்டு ஜுலை மாதம் மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

    அவர்கள் 3 பேரையும் சபாநாயகர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க மறுத்து சட்டசபைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. இதை மீறி கடந்த மார்ச் மாதம் சட்டசபை கவர்னர் உரை கூட்டத்தின் போது, 3 பேரும் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். சபாநாயகர் உத்தரவின் பேரில் சபை காவலர்கள் அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.  நேற்று 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் தங்களை திங்கட்கிழமை (நாளை) நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். இந்த கடிதத்தை சபாநாயகரின் முடிவுக்காக சட்டசபை செயலாளர் அனுப்பி வைத்துள்ளார். அதன் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை. 

    ஆனால், எந்த தடை போட்டாலும் அதை மீறி நாளை சட்டசபைக்குள் நுழைவோம் என்று நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமாக பாரதீய ஜனதா தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐகோர்ட்டு எங்கள் நியமனத்தை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மீதான அப்பீல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாங்கள் சட்டசபைக்குள் செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை.

    எனவே, நாளை நாங்கள் சட்டசபைக்கு செல்ல இருக்கிறோம். ஐகோர்ட்டு தீர்ப்பு அமலில் இருப்பதால் சபாநாயகர் எங்களை அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அதையும் மீறி தடை விதிக்கப்பட்டாலும் நாங்கள் திட்டமிட்டபடி சட்டசபைக்கு செல்வோம். ஏற்கனவே சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்காததால் நாங்கள்  சபாநாயகர் மீது ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    நாளை எங்களை நுழைய விடாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடருவோம். அதற்கு சபாநாயகர் பதில் சொல்ல வேண்டியது வரும். 

    எங்களை மத்திய அரசு  நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து இருக்கிறது. இதை சபாநாயகர் மீறுவது மத்திய அரசை மீறும் செயலாகும். எனவே, மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும். மேலும் புதுவை நிர்வாகியான கவர்னர் உத்தரவையும் சபாநாயகர் மீறி வருகிறார். இதனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். சபாநாயகரை பொருத்த வரை இந்த அரசு இருக்க கூடாது என நினைக்கிறார்.  சட்டத்தையும், கோர்ட்டு உத்தரவையும் அவர் மீறுகிறார். இதற்கான பலனை அவர் சந்திக்க வேண்டியது வரும். 

    இவ்வாறு அவர் கூறினார். #nominatedbjpmlas

    ×