search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mukkombu kollidam river"

    திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் கடந்த 22-ந்தேதி இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதையடுத்து அதன் அருகே புதிய கதவணை அமைக்க ரூ.410 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் ரூ.95 லட்சம் மதிப்பில் அங்கு தற்காலிக சீரமைப்பு பணிகள் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    கொள்ளிடம் அணையில் உடைந்த மதகு பகுதியில் பாறாங்கற்கள் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து அங்கு தண்ணீர் கசிந்து வருகிறது. அதனை அடைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கசிவு காரணமாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

    தற்காலிக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கதவணை கட்டுமானத்திற்கான ஆய்வு பணிகள் தீவிரமடைந்துள்ளன. பாலம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் உள்ள தண்ணீர் தேங்கிய பகுதி மற்றும் மணல் மேடு ஏற்பட்ட பகுதிகளில் சர்வே பணிகள் நடந்து வருகின்றன.

    முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டப்பட உள்ளதையொட்டி மண்ணின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.

    மேலும் மண்ணின் உறுதி தன்மையை பரிசோதனை செய்ய கொள்ளிடத்தின் 40 கண் மதகு மற்றும் 10 கண் மதகின் கீழ் பகுதியில் 100மீட்டர் தூரத்தில் 13 இடங்களில் போர்வெல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பூமியில் பாறை தென்படும் வரை ஆழம் ஏற்படுத்தி பிறகு இடையில் தென்படும் மண் தன்மைகள் ஆராயப்படும். தேவைப்பட்டால் மேலும் சில இடங்களில் மண் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வு பணிகள் முடிந்தவுடன் புதிய பாலத்திற்கான திட்ட மதிப்பீடு, வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என்றனர். #MukkombuDam
    ×