search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money silver kolusu seized"

    தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.14¼ லட்சம் மற்றும் வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    குன்னம்:

    தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் படைகாத்து தலைமையில், பறக்கும் படையினர் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில் சேலம் மாவட்டம் சொர்ணபுரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 16¼ கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.96 ஆயிரத்து 500–ஐ பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் பேரளி கிராமத்தில் உள்ள சுங்கச் சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிக்கான் தனது காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் கியாஸ் அடுப்புகள் ஆகியவற்றை குன்னம் துணை வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையில் கைப்பற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த அமுதாதியோஸ் என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டாட்சியர் அந்த தொகையினை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.
    ×