என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minus Zero"

    • மைனஸ் ஜீரோ நிறுவனம் தனது தானியங்கி தொழில்நுட்பத்தை மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்க இருக்கிறது.
    • தொழில்நுட்பத்தை அனைவரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் தான் zPod உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த தானியங்கி வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் மைனஸ் ஜீரோ, இந்தியாவின் முதல் தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. zPod என்று அழைக்கப்படும் புதிய தானியங்கி வாகனம் அதன் கான்செப்ட் வடிவில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கி இருக்கும் முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்தை புதிய zPod காட்சிப்படுத்துகிறது.

    ஆட்டோமோடிவ் உற்பத்தியாளர் இன்றி மைனஸ் ஜீரோ நிறுவனம் தனது தானியங்கி தொழில்நுட்பத்தை மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதை கொண்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களின் ADAS சூட்-ஐ மேம்படுத்தவும், வாகனங்களில் அதிக வசதியையும் வழங்க முடியும்.

    தனது தொழில்நுட்பத்தை அனைவரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் தான் zPod உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மைனஸ் ஜீரோ தெரிவித்து இருக்கிறது. தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து மற்றும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மைனஸ் ஜீரோ திட்டமிடுவதாக தெரிவித்து இருக்கிறது.

    மற்ற தானியங்கி வாகனங்களில் இருப்பதை போன்று zPod மாடலில் LIDAR பயன்படுத்தப்படவில்லை. மாறாக காரை சுற்றிலும் முன்புறம் ஒன்று, பின்புறம் ஒன்று, பக்கவாட்டுகளில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கேமரா மற்றும் இதர சென்சார்களை கொண்டு தடைகளை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை மைனஸ் ஜீரோ உருவாக்கி இருக்கிறது. இது ட்ரூ விஷன் ஆட்டோனமி கான்செப்ட் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கான்செப்ட்-ஐ தற்போது இருக்கும் எந்த வாகனத்திற்கும் ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது. இதுதவிர தற்போது சாலைகளில் வலம்வரும் எந்த வாகனத்திலும் இந்த தானியங்கி தொழில்நுட்பத்தை பொருத்த முடியும். இதற்கு குறிப்பிட்ட காரில் என்ஜின் கண்ட்ரோல் மாட்யுல் மட்டும் இருந்தாலே போதுமானது.

    தானியங்கி வாகனங்களை உருவாக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளில் சிலவற்றை மைனஸ் ஜீரோ தீர்த்து வைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்காக மைனஸ் ஜீரோ நிறுவனம் நேச்சர் இன்ஸ்பயர்டு ஏ.ஐ. பயன்படுத்துகிறது. விலை உயர்ந்த ஹார்டுவேர், அதிகளவு விவரங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பயணிப்பது போன்ற பிரச்சினைகளை இந்த தொழில்நுட்பம் எளிதில் எதிர்கொள்கிறது.

    இதற்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு பயிற்சி அளிப்பதற்கு மாற்றாக, இயற்பியல் சார்ந்த நோக்கம், மனித மூளையை போன்று கணித்தல் முறையில் முடிவுகளை எடுக்கும் திறன் வழங்கப்படுவதாக மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது. zPod தானியங்கி வாகனம், உலகின் எந்த பகுதிக்கும் தனது கேமரா சூட் மூலமாகவே பயணிக்கும். இது கிட்டத்தட்ட ஆட்டோனோமஸ் லெவல் 5-க்கு இணையாக செயல்படும்.

    அதாவது மனித உதவியின்றி நிஜ உலகின் போக்குவரத்து மிக்க சாலைகளில் இந்த தொழில்நுட்பம் சீராக இயங்கும். zPod நான்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இதில் உள்ள இருக்கைகள் ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான கார்களில் இருப்பதை போன்று இதில் எவ்வித கண்ட்ரோல்களும் வழங்கப்படவில்லை. கேமரா பயன்பாடு காரணமாக இதற்கான கட்டணம் பலமடங்கு குறைக்கப்பட்டு இருப்பதாக மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது.

    ×