search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "malai valibadu"

    • சூரிய வழிபாடு பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • சந்திர விழாவை உத்திர விழா என்றும் அழைப்பர்.

    நாடோடியாக திரிந்து வாழ்ந்த மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதலே இயற்கை வழிபாடாகும். மனிதன் முதலில் கருவளத்தையும் பயிர் வளத்தையும் பெறுவதற்காக இயற்கையை வழிபடலாயினான் என்பதை,

    "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    என்னும் சிலப்பதிகாரப் பாடல் அடிகளால் அறியலாம். இயற்கை வழிபாடாகிய சந்திரன், சூரியன், மழை ஆகியவற்றை வாழ்த்திப்பாடும் நாட்டுபுறப் பாடலை காணலாம்.

    நிலவு வழிபாடு:-

    சங்க காலம் தொட்டே சந்திரனை வழிபடும் முறை இருந்துள்ளது. நிலவினை வாழ்த்திப் பாடுவதை நாட்டுப்புறப்பாடல்கள் வாயிலாகவும் அறியலாம்.

    "சந்திரரே சூரியரே சாமி பகவானே

    இந்திரனே வாசுதேவா இப்ப மழை பெய்ய வேணும்

    மந்தையிலே மாரியாயி மலைமேலே மாயவரே

    சந்திரரே சூரியரே இப்ப மழை பெய்ய வேணும்

    இப்பாட்டில் மழை வேண்டிச் சந்திரனையும் சூரியனையும் வாழ்த்தி பாடுவதைக் காணலாம். நடவு நடுகின்ற போது பெண்கள் சந்திரனை வணங்கி பின் குலவையிட்டு நடுகின்றனர். சந்திர விழாவை உத்திர விழா என்றும் அழைப்பதைக் காணலாம். கிராம மக்கள் சித்திரை மாதம் பௌர்ணமியன்று சந்திரனை வழிபாடு செய்கின்றனர்.

    சூரிய வழிபாடு:-

    "சிந்து வெளி நாகரிகத்தில் சூரிய வழிபாடு பற்றிய சான்றுகள் இருக்கிறது. நாட்டுப்புறங்களில் சூரிய வழிபாடு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளன்று சூரிய உதயத்திற்கு முன்பாகப் பொங்கலிட்டுச் சூரியனை வழிபடுகின்றனர். இதனைச் சூரியப் பொங்கல் என்றும் அழைக்கின்றனர். இவ்வழிபாடானது நாடு முழுவதும் உள்ளது.

    மழை வழிபாடு:-

    பயிர்கள் செழிக்கவும், மக்கள் நல்வாழ்வு வாழவும் இன்றியமையாதது மழை. வருணனைக் கடவுளாகக் கருதி மழையை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். உலகிலுள்ள கால்நடைகளையும், பயிர் வளங்களையும் ஒருங்கே பாதுகாப்பது மாரியம்மனே என அனைவரும் நம்பி அத்தெய்வத்தை வழிபடுகிறார்கள். பயிர்த் தொழில் தொடங்குவதற்குமுன் இறைவனை வழிபடுகிறார்கள்.

    உதாரணமாக சித்திரை மாதம் நல்ல நாளில் மாடுகளை குளிப்பாட்டி குங்குமம் வைத்துப் பூச்சூட்டி ஏர்பூட்டி பூமாதேவியை வணங்குவதை காணலாம். கால்நடைகளும், பயிர்வளங்களும் செழித்து வளர்வதற்கு காரணம் மழையாகிய கடவுள். எனவே, அந்தக் கடவுளுக்கு நன்றி கூறும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக கால்நடைகளையும் பயிர்வளங்களையும் பாதுகாப்பது மாரியம்மனின் சக்தி என மக்கள் அனைவரும் நம்புகின்றனர். இக்கருத்தினை,

    "நாடு செழிக்க நல்லவரந் தந்தருள்வீர்

    காடு விளையக் கனகவரம் நல்கிடுவீர்

    நாடு செழிக்கும் நல்ல மழை பொழியும்

    பட்டி பெருகும் பால் பானை வற்றாது"

    என்னும் பாடல் வரிகள் கொண்டு அறியலாம். நேர்த்திக் கடனாகக் காணிக்கை செலுத்தாவிட்டால் துன்பம் வரும் என்ற நம்பிக்கை எல்லா மக்களிடமும் பரவலாக இடம் பெற்றுள்ளது.

    "ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆவாது

    மாரிகடன் தீர்த்தவர்க்கு மனக்கவலை தீருமம்மா"

    என்ற பாடல் வரிகள் மாரியம்மனுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்தாவிட்டால் துன்பம் வரும் என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது.

    ×