search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "main criminal"

    அதிமுக பிரமுகர் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஊட்டியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஸ்ரீநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (35). திருப்பூர் 28-வது வார்டு அ.தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்தார். சின்ன பொம்ம நாயக்கன் பாளையத்தில் ஓட்டல் நடத்தி வந்தார். மேலும் இரு சக்கர வாகனம் வாங்க பைனான்ஸ் செய்தும் வந்தார். நேற்று முன்தினம் மாலை இளங்கோ தனது நண்பர் காளியப்பன் என்பவரை அழைத்து கொண்டு திரு நீலகண்டபுரம் வடக்கு பகுதிக்கு சென்றார்.

    அங்கு பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக 3 பேரிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் இளங்கோவும், காளியப்பனும் தனித் தனி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டனர்.

    அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திருநீலகண்டபுரம் மகாகாளியம்மன் கோவில் அருகே இளங்கோவையும், காளியப்பனையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டது.இதில் காளியப்பன் லேசான காயம் அடைந்தார். இளங்கோ பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலே இளங்கோ பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிச்சையா விசாரணை நடத்தி வந்தார். அப்போது இளங்கோவை கொலை செய்தது திருநீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த கோபி, தாமோதரன், செந்தமிழன் என்பது தெரியவந்தது. இவர்களில் கோபி, செந்தமிழன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தாமோதரன் தப்பி ஓடி விட்டார்.

    அவரை பிடிக்க வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தாமோதரன் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படையினர் ஊட்டி விரைந்துள்ளது.

    தாமோதரன் போலீசில் சிக்கினால் தான் அ.தி.மு.க. பிரமுகர் கொலைக்கான முழு விவரம் தெரிய வரும் என போலீசார் கூறினார்கள்.

    ×