search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "local election உள்ளாட்சி தேர்தல்"

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #localelection

    திருச்சி:

    திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சமயபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைத்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் இல்லாத காரணத்தினால் அரசு உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கும் நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால்தான் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியும். என்னை பொருத்தவரை இன்னும் ஓராண்டு காலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. தமிழக அரசு நினைத்தால் இன்னும் மூன்று , நான்கு மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும். உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.

    சுமார் 20,000 காவலர்கள் ரத்த தானம் செய்து இருப்பதை வரவேற்கிறேன். பல மாவட்டங்களில் காவலர்களிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை முறையான பிரீசர் பாக்ஸ் எனப்படும் ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாதாரண அட்டைப் பெட்டிகளில் எடுத்து சென்றுள்ளனர். இது கண்டனத்திற்குரியது. ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக எடுத்து இருப்பதை வரவேற்கிறேன். இரண்டு பேரும் அரசியல் மற்றும் கலைத்துறையில் மக்களுடைய மரியாதையை பெற்றவர்கள். 

    சிலை கடத்தல் வழக்கில் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பின்புலமாக செயல் படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம். எனவே இதுதொடர்பாக தமிழக சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் வலுவாக எடுத்துரைக்க வேண்டும். தமிழக டெல்டா விவசாயிகளுக்கு பாசன நீர் குடிப்பதற்கு ஏற்ற வகையில் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இந்த குழு கூட்டத்திலேயே தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி தொடர்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    சென்னை-சேலம் 8 வழி சாலையால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. மக்களை தொல்லைப்படுத்தி கமி‌ஷனுக்காக சாலை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட கூடாது. 

    இவ்வாறு அவர் கூறினார்.  #thirunavukkarasar #localelection

    ×