என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lack police"

    திருவெறும்பூர் , துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லாததை பயன்படுத்தி மர்மநபர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    திருவெறும்பூர்:

    திருச்சி திருவெறும்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் , துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லாததை பயன்படுத்தி மர்மநபர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் சம்பவத்தன்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற விஜய் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 8 மர்ம நபர்கள் , கத்தியை காட்டி மிரட்டி விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இதே போல் காட்டூர் காவேரி நகரில் பட்டப்பகலில் திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அந்த வீட்டிலிருந்த பெண்ணை கட்டி வைத்து தாக்கி அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்த 12 பவுன் நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    நேற்று முன்தினம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமில் உள்ள தேவக்குமாரி என்ற பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை வழிப்பறி செய்தனர். மேலும் துவாக்குடி வ.உ.சி. நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் ஓய்வு பெற்ற பெல் அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 5 பவுன் நகை , ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனை தடுக்க காவல்துறை போதுமான முயற்சி எடுத்து வந்தாலும் பலன் அளிக்கவில்லை. இதற்கு போதுமான காவலர்கள் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தடை செய்யப்பட்ட லாட்டரி, திருட்டு வி.சி.டி., கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடமாக திருவெறும்பூர் மாறியுள்ளது.

    இங்குள்ள காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்குக்கு ஒரு ஆய்வாளரும் குற்ற பிரிவிற்கு தனி ஆய்வாளர் நியமிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆய்வாளர் மட்டுமே இரண்டு பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். மேலும் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. இருக்கும் காவலர்களும் பல்வேறு வெளி பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இதே போல் துவாக்குடி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு மாற்றலாகி கடந்த 6 மாதத்திற்கு மேலாகி விட்டது.தற்போது ஆய்வாளர் இல்லாமலேயே காவல் நிலையம் இயங்கி வருகிறது. இதனால் புகார் மனுதாரர்கள் சில நேரங்களில் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

    தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க உடனடியாக போதுமான காவலர்களை நியமிக்க வேண்டும்.காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பி குற்றங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ×