என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalipatti Kandaswamy Temple"

    • கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது.
    • முருகன் சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பினால் செய்யப்பட்ட கருப்பு சாம்பல்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    சேலம் - நாமக்கல் எல்லைப் பகுதியில், திருச்செங்கோடு வட்டம் காளிப்பட்டி என்னும் கிராமத்தில் கந்தசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தென்றல் தவழும் கிராமங்கள், பசுமை போர்த்திய வயல்வெளிகள், ஓங்கி உயர்ந்த மலைகள் நிறைந்த பகுதியில் கம்பீரமாய் காட்சியளிக்கிறது இந்த முருகன் கோவில்.

    தல வரலாறு

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் முருக பக்தர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை ஒட்டி, கடும் விரதம் இருந்து காடு, மேடுகளை தாண்டி, விஷ ஜந்துக்களை பொருட்படுத்தாமல் பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார்.

    அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ''இனி நீ என்னைத் தேடி பழனி வரத் தேவையில்லை. உனது இடத்திலேயே நான் குடியிருக்க விரும்புகிறேன். எனக்கு இங்கே கோவில் எழுப்பு'' என்று அருள்கூறி மறைந்து விட்டார். அதன்படி கட்டப்பட்டது தான் இந்த காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில்.

     

    கோவில் தோற்றம்

    கோவில் அமைப்பு

    இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலயம் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோவிலின் நுழைவுவாசலில் ஐந்து நிலை ராஜகோபுரம் காணப்படுகிறது. ஆலயத்தின் மூலவராக கந்தசாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோவிலின் வெளியே வடக்குப் பகுதியில் இடும்பன் சன்னிதி உள்ளது. அதைத்தொடர்ந்து விநாயகர் சன்னிதி காணப்படுகிறது. சனீஸ்வரர், வேலாயுதசாமி உபசன்னிதிகளும் உள்ளன.

    இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்த கோவிலில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து வருகின்றனர். இந்த கோவிலில் இருக்கும் பூசாரி, முருகப்பெருமானின் அபிஷேக தீர்த்தத்தையும், விபூதியையும் கொடுத்த பிறகு சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுகிறதாம்.

    இங்கே முருகன் சன்னிதியில் விபூதிக்கு பதிலாக கரும்பினால் செய்யப்பட்ட கருப்பு சாம்பல்தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது. இதனை அருமருந்து என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். கரிய நிறத்தில் மணல் போல இது இருக்கும். இந்த பிரசாதம் தயாரிக்க சுற்றிலும் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்களே மனமுவந்து வந்து கோவிலுக்கு கரும்புகளை தந்து மகிழ்கிறார்கள். பக்தர்கள், தங்கள் நிலத்தில் கரும்பு பயிரிட்டதும், ''நடப்பாண்டு, பிரசாத திருநீறு நாங்கள் கொண்டு வந்து தருகிறோம்'' எனக் கூறி, ஓராண்டுக்கு முன் வாக்களிப்பர்.

    அதன்படி விரதமிருந்து, கரும்பு சக்கைகளை எரித்து கிடைக்கும் சாம்பலை சுத்தப்படுத்தி, கோவிலில் கொடுக்கின்றனர். இப்படி பக்தியுடன் கொடுக்கப்படும் சாம்பலை, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேறு எந்த கலப்பும் செய்யாமல், அப்படியே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மணம் எதுவும் இல்லாத இந்த பிரசாதம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளின் நோய்களையும் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

    திருவிழாக்கள்

    இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் எனக் கூறப்படுகிறது. வைகாசி விசாகம் போன்ற நாட்களில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குடும்பத்தில் சிக்கல், வியாபாரத்தில் நஷ்டம், தேவையில்லாத அச்சம் உள்ளிட்டவற்றால் அவதிப்படக் கூடியவர்கள் இங்கு வந்து காளிப்பட்டி கந்தசாமியை மனதார பிரார்த்தனை செய்து, கோவிலில் இருக்கும் இடும்பன் சன்னிதியில் கொடுக்கப்படும் மை பிரசாதத்தைப் பெற்று தினமும் நெற்றியில் வைத்து வழிபட்டால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும், குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அகலும் என்றும், தேவையில்லாத பயம் விலகும் என்றும் கூறப்படுகிறது. பில்லி, சூனியம் போன்ற செய்வினைகள், இடும்பன் சன்னிதியில் தயாரித்து கொடுக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த மையினால் விடுபட்டு உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேரோட்டமும் நடைபெறும். அந்த திருவிழாவில் திரும்பிய திசையெல்லாம் காவடி ஆட்டம், உருளுதண்டம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று தமிழர்களின் பாரம்பரிய கலைகள் பக்தி பரவசத்துடன் களைகட்டுகிறது.

    இந்த கோவிலில் வைகாசி விசாக நாளில் உற்சவர் வீதி உலா நடைபெறும். அப்போது காளிப்பட்டி கந்தசாமியை வணங்கினால் கவலைகள் முழுவதுமாக நீங்கிவிடும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த கோவிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகின்றது.

    கோவில், காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சேலம் - திருச்செங்கோடு சாலையில் திருச்செங்கோட்டிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் காளிப்பட்டி முருகன் கோவில் அமைந்துள்ளது.

    ×