என் மலர்

  நீங்கள் தேடியது "ISL final"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #BengaluruFC #FCGoa #ISLFinal
  மும்பை:

  5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி தொடங்கியது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை குறுக்கிட்டதால் சில காலம் இடைவெளி விட்டு நடந்த இந்த போட்டியில் லீக் ஆட்டம் முடிவில் பெங்களூரு, எப்.சி., எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. ஆகிய 4 அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறின. ஜாம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, எப்.சி.புனே சிட்டி, டெல்லி டைனமோஸ் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. மற்றும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பெற்று அரை இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

  பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதியின் முதல் சுற்றில் பெங்களூரு அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோவ்வியும், 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணி 3-0 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றது. கோல் வித்தியாசம் அடிப்படையில் பெங்களூரு எப்.சி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதியின் முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியும், 2-வது சுற்றில் கோவா அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியும் கண்டது. கோல் வித்தியாசம் அடிப்படையில் கோவா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கோவா அணி 2-வது தடவையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

  கோவா அணியில் பெர்ரான் கோரோமினாஸ் (ஸ்பெயின்) 16 கோல்கள் அடித்து இந்த போட்டி தொடரில் முன்னிலை வகிக்கிறார். அந்த அணியில் இடம் பிடித்துள்ள எடு பெடியா 7 கோல்கள் அடித்துள்ளார். அவர்கள் இருவரையும் தான் அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி (9 கோல்கள்), மிகு (5 கோல்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். லீக் ஆட்டம் முடிவில் சமபுள்ளிகள் பெற்ற (10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி) இந்த இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

  பெங்களூரு, கோவா அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 3 முறையும், கோவா அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டத்திலும் பெங்களூரு அணியே வெற்றி கண்டது. எனவே அந்த ஆதிக்கத்தை பெங்களூரு அணி இறுதிப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

  இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
  ×