என் மலர்
நீங்கள் தேடியது "india table tennis"
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி, டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது. #AsianGames2018 #IndiaTableTennis
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர்களுக்கான ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் சரத் கமல்-மணிகா பத்ரா ஜோடி சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதியில் சரத் கமல்-மணிகா பத்ரா ஜோடி, வடகொரியாவின் ஜி சாங் அன்- ஹியோ சிம் சா ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் கடுமையாகப் போராடிய இந்திய ஜோடி, 4-11 12-10 6-11 11-6 11-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பதக்கத்தை உறுதி செய்தது.
அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சரத் கமல்- மணிகா பத்ரா ஜோடி, சீனாவின் வாங் சுகின்- சன் யிங்ஷா ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் பின்தங்கிய இந்திய ஜோடி முதல் இரண்டு செட்களையும் இழந்தது. அதன்பின் சுதாரித்து ஆடி, மூன்றாவது செட்டை வசமாக்கியது.

அதே வேகத்துடன் இந்திய ஜோடி முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய ஜோடியின் வேகம் குறைந்தது. அசுர வேகத்தில் ஆடிய சீன ஜோடி, அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றியது. இதன்மூலம் 9-11, 5-11, 13-11, 4-11, 8-11 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சீன ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போராடித் தோல்வி அடைந்த இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
முன்னதாக டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #IndiaTableTennis






