search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Handwritten notes"

    டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவத்தில், 11 பேருக்கும் உத்தரவு பிறப்பித்ததுபோல் உள்ள மர்ம கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. #BurariDeaths
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூப்பர் மார்கெட் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அந்த குடும்பத்தில் உள்ள 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

    10 பேர் கண்களை கட்டிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், 77 வயதான மூதாட்டி மட்டும் கட்டிலில் கிடந்தபடியும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவே தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த சோக சம்பவத்துக்கு உத்தரவு பிறப்பித்ததுபோல், காணப்படும் மர்ம கடிதங்கள்  அவர்களது வீட்டில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    முக்திப்பேறு பெறுவதற்காக சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் காணப்படும் அந்த கடிதங்களில், ‘இந்த சடங்கை (தற்கொலை) செவ்வாய், வியாழன் அல்லது சனிக்கிழமையில் தான் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அந்த சடங்கை செய்யும் நாளில் வீட்டில் யாரும் சமைக்க கூடாது. கைபேசிகளை ஆறு மணி நேரத்துக்கு ‘சைலண்ட் மோட்’-ல் வைத்துவிட வேண்டும். அனைவரும் தூக்கிட்டு கொண்டார்களா? என்பதை கண்காணிக்க ஒருவர் காவலுக்கு நிற்க வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளது.

    இதை வைத்துப் பார்க்கும்போது அந்த குடும்பத்தில் உள்ள பத்து பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை உறுதிப்படுத்திய பின்னர் தரையில் இறந்துகிடந்த 75 வயது மூதாட்டி தனது முடிவை தேடிகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த சடங்குகளை செய்வதால் ஒருவர் இறந்துப் போவதில்லை. கடவுளால் காப்பாற்றப்பட்டு உயர்வான ஸ்தானத்தை பெறுவார்கள் எனவும் அந்த கடிதம் குறிப்பிடுகின்றது.

    இந்த கடிதத்தை வைத்து இது ‘பக்தி முற்றினால் பித்து’ என்ற கோணத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் என கருதும் டெல்லி போலீசார், அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட கைபேசிகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×