search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujjar reservation"

    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். #Gujjar #Protest #Rajasthan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்-மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் ரெயில் மறியல், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ரெயில் மறியல், தர்ணா போன்ற போராட்டங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.



    டெல்லி-மும்பை, டெல்லி-ஜெய்ப்பூர் ரெயில் பாதைகளிலும் போராட்டம் நடந்ததால் அந்த வழியாக செல்லும் 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    போராட்டம் குறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மறியலை கைவிடவேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் ரெயில் நிலையங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், போராட்டக்காரர்களின் இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி பிரதமரிடம் எடுத்துச்செல்வேன்’ என்றும் கூறினார்.

    போராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘எங்களுக்கு நல்ல முதல்வரும், நல்ல பிரதமரும் கிடைத்து உள்ளார்கள். பிரதமரின் கவனத்துக்கு எங்கள் கோரிக்கையை கொண்டுசெல்லவே போராடுகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்துள்ள நிலையில் நாங்கள் 5 சதவீத இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்’ என்றார். 
    ×