search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Greece visit"

    • 40 வருடங்களுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ஆவார்
    • சந்திரயான்-3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான வெற்றி

    சரித்திர புகழ் பெற்ற பண்டைய கிரேக்க நாகரிகத்தின் அடையாளமாகவும், உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பிரியர்களின் விருப்பமான நாடாகவும் விளங்குகிறது, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கிரீஸ்.

    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் 3-நாள் உச்சி மாநாடு நிறைவடைந்ததும், இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் சுற்றுப்பயணமாக கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். 1983-ல் ஒரு இந்திய பிரதமர் சென்றதை அடுத்து, 40 வருடங்களுக்கு பிறகு, மோடி, அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ஆவார்.

    2019-ல் கிரீஸ் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் அவரை கிரீஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜார்ஜ் கெராபெட்ரிடிஸ் வரவேற்றார்.

    மோடி தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியிலும், அவர் சென்ற வழி நெடுகிலும் இந்தியர்கள் இந்திய கொடியை ஏந்தியபடி அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர். பல போர்களில் உயிர் நீத்த கிரீஸ் நாட்டு வீரர்களுக்கான போர் நினைவுச்சின்னம் உள்ள சின்டாக்மா சதுக்கத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு மோடி மற்றும் கிரீஸ் அதிபர் கேட்டரீனா சகெல்லரோபவுலவ் (Katerina Sakellaropoulou) இடையே நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையே நிலையான வளர்ச்சியை உருவாக்கவும், இரு நாட்டு நல்லுறவை வளர்க்கும் விதமாக பல விஷயங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சந்திரயான்-3 வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த கிரீஸ் அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி, "சந்திரயான்-3 வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான வெற்றி" என கூறினார். மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார்.

    தனது சுற்றுபயணத்தின் அங்கமாக பிரதமர் மோடி, இரு நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் கிரீஸ் நாட்டில் உள்ள இந்தியர்களையும் சந்திக்க இருக்கிறார்.

    ×