search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government arts college. ஊட்டி அரசு கலைக்கல்லூரி"

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    ஊட்டி:

    ஆசிரியராக தனது பணியை தொடங்கி கடின உழைப்பாலும், நற்சிந்தனையாலும் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ-மாணவிகள் கேக் வெட்டி, முதலாவதாக கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்திக்கு ஊட்டி விட்டனர். தொடர்ந்து அவருக்கு நினைவு பரிசாக சுவர் கடிகாரமும் வழங்கினர். இதற் கிடையே பேராசிரியர்களுக்கும் கேக் வழங்கப்பட்டது.

    இதையடுத்து பேராசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக கயிறு இழுத்தல் போட்டியானது ஆண்கள்- பெண்கள் மற்றும் பேராசிரியர்கள்- மாணவர்கள் இடையே நடந்தது. இதில் அனைவரும் கலந்துகொண்டு அசத்தினர். பின்னர் மாணவிகளின் நடனம், ஓரங்க நாடகம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளே விழாவுக்கு ஏற்பாடு செய்து ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தது பேராசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-

    கல்லூரி மாணவ- மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டும் வகையில் விழா நடைபெற்றது. இதன் மூலம் நிர்வாகத்திறமை, ஆளுமை திறன் போன்றவை வளரும். வகுப்புக்குள் கல்வி கற்பதை போல மாணவ- மாணவிகள் கல்வி அல்லாத திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இளம் தலைமுறையினர் அடித்தளமாக விளங்க வேண்டும். வகுப்புகளில் அதிக மாணவ- மாணவிகள் இருக்கும்போது, அவர்களது தனிப்பட்ட திறமைகளை காண முடியாது. அதனை வெளிக்காட்டும்போது தான் ஆக்கப்பூர்வமான திறமைகள் தெரியவரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    விழாவில் விலங்கியல் துறை தலைவர் எபினேசர், வேதியியல் துறை தலைவர் சரஸ்வதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். 
    ×