search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "good conduct"

    நன்னடத்தை சான்றிதழ் பெற இணைய வழி சேவையை பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    தமிழக போலீஸ்துறை சார்பில், போலீஸ் நன்னடத்தை சரிபார்ப்பு என்கிற புதிய இணையவழி சேவை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சேவையை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் தொடங்கி வைத்து, விண்ணப்பதாரருக்கு சரி பார்ப்பு சேவை அறிக்கையின் நகலை வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    போலீஸ் நன்னடத்தை சரிபார்ப்பு சேவையில் பொது மக்கள், கட்டணம் செலுத்தி தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு, தனியார் நிறுவனங்கள் ஆகிய நன்னடத்தை சான்றிதழ்களை www.eservies.tnpolice.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். தனி நபருக்கு ரூ.500ம், தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1,000- ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை கிரெடிட், டெபிட் கார்டுகள், இணையவழி வங்கி சேவை முறைகளில் ஏதேனும் ஒன்றின் வாயிலாகவும் செலுத்தலாம்.

    இந்த சேவை பெற விவரம், சரிபார்க்க வேண்டிய தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக போலீஸ் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அந்த நபர் ஏதேனும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளாரா என்றும், இது தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படும்.

    விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ் நன்னடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். இந்த சேவையை பெற பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போலீஸ் நிலையங்களுக்கு நேரிடையாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இணையதளம் வழியாக விண்ணப்பித்து போலீஸ் அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள கியூ.ஆர். குறியீட்டினை ஸ்கேன் செய்து அல்லது சரிபார்ப்பு என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்து கொள்ளலாம்.

    பி.வி.ஆர். எண்ணை பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். சேவையில் குறைபாடுகள் இருந்தால் பின்னூட்டம் என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

    இந்த பின்னூட்டம் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமி‌ஷனர் மற்றும் சென்னையில் உள்ள போலீஸ் உயர்அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கிமுறையில் நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.

    விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அந்த விண்ணப்பங்களுக்கு கட்டண தொகை திருப்பி அளிக்கப்பட மாட்டாது. போலீஸ் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரெங்கராஜன், தங்கவேலு (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அழகுத்துரை, போலீஸ்தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×