search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former minister kannan"

    புதுவையில் முன்னாள் அமைச்சர் கண்ணன் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #FormerMinister #Kannan
    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் கண்ணன்.

    காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி. என பதவிகள் வகித்தார். காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் முரண்பாடு காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி அவ்வப்போது புதிய கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலை கண்ணன் எதிர்கொள்வார்.

    கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் மூப்பனார் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார். அப்போது கண்ணன் புதுவையில் த.மா.கா.வை தொடங்கி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.

    1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராக இருந்தார். இதனையடுத்து தமிழகத்தில் மூப்பனார் காங்கிரசில் இணைந்து போது புதுவையிலும் கண்ணனும் காங்கிரசில் இணைந்தார்.

    தொடர்ந்து 2001-ம் ஆண்டு 2-வது முறையாக மீண்டும் காங்கிரசில் இருந்து, வெளியேறி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

    2006-ம் ஆண்டு மீண்டும் கண்ணன் காங்கிரசில் இருந்து வெளியேறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், ஆட்சியை அமைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்த கண்ணனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த கண்ணன் மீண்டும் காங்கிரசில் இருந்து வெளியேறினார்.

    2016-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வில் இணைந்து ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதன் பிறகு கடந்த 2 ஆண்டு காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் கண்ணன் ஒதுங்கி இருந்தார்.

    தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை கண்ணன் வெளியிட்டுள்ளார் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் டெல்லியில் தேர்தல் கமி‌ஷனில் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் முடிவடைந்த பிறகு கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்ணன் வெளியிட உள்ளார்.

    புதிய கட்சி தொடங்குவதற்கான காரணம் குறித்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில அரசியல் சூழலில் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளேன். நான் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன். அந்த கட்சியின் பெயர், அமைப்பு, சின்னம், எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னர் கட்சியின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிப்பேன்.

    சில காலம் நான் அமைதியாக இருந்தேன். இதற்கு காரணம் எதுவும் இல்லை. அமைதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டதால் அமைதியாக இருந்தேன். எந்த முடிவையும், அவசரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

    மக்களின் பிரச்சினைகள், கஷ்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பார்த்தால் அதிகமாக உள்ளது. இதனால் விலைவாசி ஏறிக் கொண்டே செல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள் தான். எனவே எதையாவது செய்து தான் ஆகவேண்டும் என்ற நெருக்கடி நிலை உருவானது. அதனால் தான் புதிதாக கட்சி தொடங்கி உள்ளேன்.

    எங்களை பொறுத்தவரை எங்களுக்கு எந்த கட்சியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் பக்கம் நாங்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன். அல்லது நல்ல வேட்பாளர் யாராவது போட்டியிட்டால் அவருக்கு ஆதுரவு கொடுப்பேன். தேர்தல் வரும் போது அதனை அறிவிப்பேன்.

    இவ்வாறு கண்ணன் கூறினார். #FormerMinister #Kannan
    ×