search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen block road"

    • போலீசாருடைய தடுப்பையும் மீறி மீனவர்கள் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒரு சிலர் கோட்டக்குப்பம் நோக்கி வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு 700 மீனவ குடும்பங்கள் உள்ளது.

    சுமார் 200 மீன்பிடி படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக கடல் சீற்றம் மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் புயல் பாதிப்பால் நடுக்குப்பம் மீனவ பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது.

    கடல் அரிப்பு ஏற்பட்டு நடுக்குப்பத்தில் உள்ள பல்வேறு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது.

    கடந்த 3 ஆண்டுகளில் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களான முருகன், மாணிக்கசாமி, பூபாலன், மணிகண்டன், மதுரை ஆகிய 5 பேர் கடல் சீற்றத்தில் இறந்துள்ளனர்.

    இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க தமிழக அரசு கடற்கரை ஓரத்தில் கருங்கற்களை கொட்டியுள்ளது. கருங்கற்களை கொட்டி உள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே தந்திராயன் குப்பம், பொம்மையார்பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு போல நடுக்குப்பம் மீனவ குப்பத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது இவர்களது படகுகளை அருகில் உள்ள ஆதி திராவிடர் காலனிக்கு சொந்தமான சுடுகாட்டில் நிறுத்தும்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையாக மாறி வருகிறது.

    எனவே தங்களுக்கு படகு நிறுத்த நிரந்தர தீர்வு வேண்டுமானால் நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீனவர் கிராம பஞ்சாயத்து சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, கலெக்டர், மீன்வளத்துறை மற்றும் காவல் துறையினருக்கு பலமுறை மனு அளித்து உள்ளனர்.

    ஆனால் இதுவரை தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பாக எந்த விதமான அரசு முன்னெடுப்பும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் அவர்களது படகை ஆதிதிராவிடர் காலனி இடுகாட்டில் நிறுத்தும் போது காலனி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நடுக்குப்பம் மீனவ பகுதி பொதுமக்கள் இன்று காலை 500-க்கும் மேற்பட்டோர் நடுக்குப்பத்திலிருந்து பேரணியாக வந்து கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே உள்ள புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு மறியல் செய்தனர்.

    ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட போலீசார் தயாராக இருந்த நிலையில் மறியலில் ஈடுபட முயன்ற மீனவர்களை தடுத்தனர். அப்போது மீனவர்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் தள்ளு, முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    போலீசாருடைய தடுப்பையும் மீறி மீனவர்கள் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாகனங்களும் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்களும் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோட்டக்குப்பம் துணை துணை சூப்பிரண்டு சுனில் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மீனவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். ஒரு சிலர் போலீசாரின் கைதை கண்டிக்கும் வகையில் போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    போலீசாரின் தடுப்பை மீறி ஒரு சிலர் கோட்டக்குப்பம் நோக்கி வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக சுமார் 500 மீனவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    ×