search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employoee injury"

    பல்லாவரம் அருகே மாநகராட்சி ஊழியர் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பல்லாவரம் ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). இவர் தேனாம்பேட்டையில் மாநகராட்சி ஊழியராக பணிபுரிகிறார்.

    இன்று காலை அவர் காலில் ரத்தகாயத்துடன் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த டாக்டர்களிடம் ‘‘வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கூரையை பிய்த்துக் கொண்டு பறந்து வந்த ஏதோ ஒரு பொருள் காலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது’’ என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ராஜேந்திரனின் காலை டாக்டர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தனர். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.

    இவரது வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ராணுவம் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வார்கள்.

    அவ்வாறு பயிற்சி செய்யும் போது துப்பாக்கி குண்டு இவ்வளவு தூரம் பாய்ந்து வந்து தாக்க கூடிய சாத்தியம் இல்லை. எனவே இந்த துப்பாக்கி குண்டு எங்கிருந்து யாரால் சுடப்பட்டது என தெரியவில்லை.

    துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே வெடித்த தோட்டாக்களில் இருந்து வீணாகி கீழே கிடக்கும் செம்பு உலோகத்தை சிலர் பொறுக்குவது வழக்கம். அதற்கு அனுமதி இல்லை. இருந்தாலும் சிலர் அதிகாரிகளுக்கு தெரியாமல் அத்துமீறி நுழைந்து அத்தகைய செயலில் ஈடுபடுவார்கள். அதுபோன்று செம்பு உலோகம் பொறுக்க சென்ற ராஜேந்திரன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததா? என்பன போன்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×