search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaning staff struggle"

    நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடுதல் நேர பணி ஊதியத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் 93 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான ஊதியம் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை.

    எனவே கூடுதல் பணி ஊதியம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே 2 முறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் ஊதிய நிலுவை தொகையை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டனர்.

    இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையின்போது நிலுவை தொகை ரூ.4 லட்சத்தை இந்த மாதம் 15-ந் தேதிக்குள் தருவதாக தனியார் நிறுவனத்தினர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உறுதி அளித்தப்படி வழங்காததால் நேற்று மீண்டும் தூய்மை பணியாளர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வி தலைமையில் தூய்மை பணியாளர்கள் கூடுதல் நேர ஊதியத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் இந்த விவகாரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலையிட்டு தூய்மை பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இவர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நேற்று பாதிக்கப்பட்டது.
    ×