search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civilians protest in salem"

    சேலம் அருகே புதியதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் அருகே வீராணம் பகுதியில் சீலாவரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே செல்லும் சாலையின் இருபுறங்களிலும் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த பகுதி இயற்கை சூழல் ரம்மியமாக இருப்பதால் மேலும் அங்கு ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    3-வதாக ஒரு டாஸ்மாக் கடை அங்கு அமைக்கப்பட இருப்பது குறித்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஏரி அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள், கடை முன்பு அமர்ந்து வேண்டாம், வேண்டாம் டாஸ்மாக் கடை வேண்டாம். அகற்று, அகற்று டாஸ்மாக் கடையை உடனே அகற்று என பல்வேறு கோ‌ஷங்களை முழங்கினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஏற்கனவே உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து செய்திருப்பது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

    இங்கு மது குடிக்க வரும் குடிமகன்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. மது குடித்து விட்டு நடுரோட்டில் சண்டை போடுகிறார்கள். அவர்களது சண்டையினால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பயப்படுகிறார்கள். மது போதையில் கேலி, கிண்டலும் செய்கிறார்கள். ஆகவே, இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதற்கு போலீசார், உயர் அதிகாரிகளிடம் இது பற்றி பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள்.
    ×