என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannabis Eradication"

    • அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ராட்சத கொதிகலன்களில் கஞ்சாவை போட்டு போலீசார் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தவாறு பணியாளர்கள் அழித்தனர்.

    வல்லம்:

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 13 ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் நடைபெற்றது.

    அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அடுத்த அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், கரூர், அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரத்து 775 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி வாகனங்கள் மூலம் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள ராட்சத கொதிகலன்களில் கஞ்சாவை போட்டு போலீசார் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தவாறு பணியாளர்கள் அழித்தனர்.

    நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயசந்திரன், திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத், திருச்சி துணை கமிஷனர் அன்பு, அந்தந்த மாவட்ட ஏ.டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஏராளமான போலீஸார் கலந்து கொண்டனர்.

    ×