என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buses lorry break"

    வன்னியர் சங்க தலைவருமான குரு நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். தகவல் அடைந்த பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் ஆவேசம் அடைந்து பஸ் மற்றும் லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர்.

    புதுச்சேரி:

    பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான குரு நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இந்த தகவல் அறிந்த பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் ஆவேசம் அடைந்து பல இடங்களில் பஸ் மற்றும் லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர்.

    இன்று காலை 5 மணியளவில் ஒரு பஸ் புதுவையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.

    மரப்பாலம்- வேல்ராம் பட்டு சந்திப்பில் வந்த போது முகத்தில் துணியால் மூடியபடி வந்த மர்ம நபர் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினார். இதில் பஸ் டிரைவர் மோகன்ராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி பஸ் மீது கற்கள் வீசிய மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் அரியாங்குப்பத்தில் நேற்று இரவு 12.30 மணியளவில் தமிழக அரசு பஸ் கண்ணாடியை சிலர் கல்வீசி உடைத்தனர்.

    அதுபோல் நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு புதுவைக்கு தமிழக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    நள்ளிரவு 1 மணியளவில் அந்த பஸ் திருச்சிற்றம்பலம் பைபாஸ் சாலையில் வந்த போது இருளில் மறைந்திருந்த ஒரு கும்பல் அந்த பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது. இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதுகுறித்து பஸ் டிரைவர் செங்குட்டுவன், கண்டக்டர் சந்திரசேகர் ஆகியோர் ஆரோவில் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கனூரில் இன்று காலை பா.ம.க. மண்டல செயலாளர் சிவா, தொகுதி செயலாளர் அச்சுதன், கோபி, ஸ்ரீதர் உள்ளிட்ட சிலர் அவ்வழியாக சென்ற லாரி- பஸ்களை இயக்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். மேலும் இதனை மீறி சென்ற ஒரு லாரியின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு திருக்கனூரில் இருந்து விழுப்புரம் மற்றும் புதுவைக்கு பஸ்கள், லாரிகள் எதுவும் இயக்கப்படவில்லை.

    புதுவையில் இருந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு பெரும்பாலான தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒருசில அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். ஏற்கனவே நேற்று பந்த் போராட்டத்தால் பஸ்கள் இயக்கப்படாத நிலையில் இன்றும் பெரும்பாலான பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். 

    ×