search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "burned important documents"

    பழனி கோவில் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியது.
    பழனி:

    பழனி மலை அடிவாரத்தில் முருகன் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தான அலுவலகம் உள்ளது. இங்குள்ள இணை ஆணையர் அலுவலக ஏசி மிஷினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு புகை மூட்டம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பரவியது.

    இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் குளிரூட்டும் சாதனங்களில் இருந்த தீயை அணைத்தனர். இதனால் தீ மற்ற அறைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இணை ஆணையர் அறையில் இருந்த பீரோவில் டெண்டர் தொடர்பான ரசீதுகள் இருந்தன. அதில் சில ஆவணங்கள் எரிந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டது.

    மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். கோவில் அலுவலர்களுக்கோ கட்டிடத்துக்கோ எந்த சேதமும் எற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவில் அலுவலகத்தில் நடந்த தீ விபத்து பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவிலில் நடந்த சிலை மோசடியில் ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் தனக்கு அரசு எவ்வித ஒத்துழைபபும் தரவில்லை என நீதிமன்றத்திலேயே புகார் தெரிவித்திருந்தார்.

    மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிலை மோசடி வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தற்போது கோவிலில் நடந்த தீ விபத்து திட்டமிட்டு நடத்தி ஆவணங்களை அழிக்க முயற்சி எடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரரமரவிக்குமார் தெரிவிக்கையில், தீ விபத்து நடந்த அறையில் எந்தந்த ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தன? அவை அனைத்தும் கணினியில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்ற விபரங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியிட வேண்டும்.

    தீ விபத்து மின் கசிவால் நடந்ததா? அல்லது ஆவணங்களை அழிக்க சதி திட்டமா? என போலீசார் விசாரணை நடத்த வேண்டும். ஒரு வேளை ஆவணங்களை அழிக்க முயற்சி நடந்திருந்தால் சம்பந்தப்பப்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் தலைமையிலான போலீசாரே ஐம்பொன் சிலை வழக்கை இறுதி வரை விசாரிக்க வேண்டும். அவருக்கு முழு சுதந்திரத்தை அரசு அழிக்க வேண்டும் என்றார்.

    ×